Thursday, December 26, 2013

ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான் எழுதிட எழுதிட அகம்நாளே!



ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான்
எழுதிட எழுதிட வலைநாளே!
தானே வந்திடும் பதிவுபல-வர
தொல்லை தந்திடும் பதிவுசில!
தேனாய் இனித்திடும் சிலவேளை
தேளாய் கொட்டும் பலவேலை!
ஆனால் விடவும் இயலவில்லை-எனினும்
அஞ்சுதல் வாழ்வில் பயிலவில்லை!

நித்தம் எழுதியே வருவேனே – உலகில்
நிலையல வாழ்வு அறிவேனே!
சித்தம் மகிழ மறுமொழியும்-உடன்
செப்பிட விருப்பம் தருமொழியும்!
சத்தென என்னை வாழ்விக்கும்-மருத்துவ
சக்தியாய் மேலும் ஊக்குவிக்கும்!
வித்தென நாளும் வருவீரே-அதுவே
விளைந்திட விருப்பம் தருவீரே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 25, 2013

ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்






ஏசுவே மீண்டும் வாரும்
   இங்குள்ள  நிலையைப்  பாரும்
பேசுவ அனைத்தும்  பொய்யே
   பிழைப்பென! காண்பீர்  மெய்யே!
கூசுவ அரசியல்  போக்கே!
    குறைகண்டே  விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க  வாரும்!
    துயர்போக எம்மைக்  காரும்!

கருணையின்  வடிவம்  நீயாய்
   காப்பதில் அன்புப்  தாயாய்
பெருமையும் பெற்றவர்  ஆக,
    பேசுதல் நிலையாய்ப்  போக!
உருவமே பெற்று  வருவீர்
    உலகினைக்  காத்தே அருள்வீர்!
தருணமே  இதுதான்!  ஆகும்!
    தவறிடின் ! அழிந்து போகும்!

             புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 23, 2013

நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!



நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும் போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல்!
இங்கே நானும் எழுதுவ-என்னுள்
இருப்பதும் நீயா நானன்றோ

புலவர் சா இராமாநுசம்