Saturday, December 21, 2013

அன்புப் பெரியவர் ,ஐயா G.m பாலசுப்பிரமணியம் விருப்பத்திற்கு ஏற்ப மயில் பற்றிய கவிதை





 சிறுவன்

மயிலே மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்

மயில்

வெள்ளி வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்

சிறுவன்

அழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ

மயில்

குயிலின் இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!

                   புலவர்  சா  இராமாநுசம்
       

Friday, December 20, 2013

நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக நன்றா? ஒன்றா? கூறுங்கள்!



ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் ஒன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது இன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்கும்-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்கும்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறவா!? இவ்வாறே
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு! சரியெண்ணில்!
            
                    புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 18, 2013

தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால் தோன்ற வேண்டும் அதில்மாற்றம்!



தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்!
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக!
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை!
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை!

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம்!
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானெனப் பண்ணாதீர்!
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்!
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப்
போக வந்திடும் முன்னேற்றம்!

எண்ணிச் செயல்படின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்!
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்!
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும் ஏமாற்றம்!
மண்ணில் எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்!

                         புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 16, 2013

இறுதி முச்சு உள்ளவரை-நம் இதயம் எண்ணம் எண்ணும்வரை!


தமிழா....!

இறுதி முச்சு உள்ளவரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா!
குருதிசிந்தக் கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா!

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமா-இந்த
உலகம் உணர உய்வோமா !
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணர்ந்து வருவாரா!

அடங்கிப் போனோம் நாமென்றே-ஆளும்
ஆணவ ஆட்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமா-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமா!
ஒடுங்க மாட்டோம் நாமென்றே-அவர்
உணர எதிர்த்துத் தினம்நின்றே!
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...