Saturday, December 14, 2013

புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர் போற்ற ஆட்சியை அளியுங்கள்!




 தியாகம் தியாகமென -காந்தி
தினமும செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனைச்
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியல் தனைநாடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருக்கு ஏது   எல்லை

பெற்ற விடுதலைப் பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமூடி மறைக் கின்றார்
அற்றவர் வாழ்வேப் போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம்

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால் தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணுமா சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 12, 2013

என் முகநூல் பதிவுகள்-எட்டு





நாம் ஒருவர் மீது கோபமோ , வெறுப்போ கொண்டிருந்தால் அவனைப்பற்றி பேச்சு வரும்போது அவன் இருந்தா என்ன! செத்தா என்ன! என்று பேசுகிறோம்! அதுபோல வள்ளுவரும் சொல்வது, வியப்பல்லவா! அதாவது ஒருவன், வாயால் அறிகின்ற சுவை (உப்பு, காரம் , இனிப்பு போன்றவை) மட்டுமே அறிந்து
கொண்டு , செவிச் செல்வமாகிய கேள்விச் செல்வத்தின் சுவையை அறியாது வாழ்பவன் இருந்தா என்ன! செத்தா என்ன! என்று வள்ளுவர் கல்விச் செல்வத்தின் முக்கியத்தை
விளக்கக் கூறுகிறார்

உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வதற்குச் செல்வம் தேவை! ஆகவே அதனைப் பெற பல வகையில் முயற்சி செய்யறோம்!ஆனால் , அச் செல்வமானது, நாம் தேடாமலேயே,( அதுவே )நம்மை அடைய வழி கேட்டு வருவதற்கு ,வள்ளுவர்
சொல்வது, நாம் செய்யும் எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை நம்மிடம் இருந்தால் போதும் என்பதே ஆகும்!

சில நேரங்களில் நாம் கோபம் வந்தா , என்ன பேசறோம் ,என்று தெரியாமல் சுடு சொற்களை கொட்டி விடுகிறோம் அதனால் மனதில் ஏற்பட்ட காயமானது, எப்படிப் பட்டது என்றால் தீயினால் ஏற்பட்ட புண் கூட ஆறிப்போயிடும் ,நம் சுடு சொற்களால் , அம்மனக்காயமோ மாறாத வடுவாக பாதிக்கப் பட்டவரின் மனதில் என்றும் நின்று விடும்!

                      புலவர்  சா  இராமாநுசம்


Tuesday, December 10, 2013

எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கனும் தேடியும் காணல்அருமை !



எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கனும் தேடியும் காணல்அருமை !
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும் !
மங்காது நடக்குதே மக்களவை-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவை !
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை !

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் வீணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக !
பொல்லாத விளைவுகள் தேடிவருமே-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே!
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்புங்கள் அதுதானே எனகுப் பெருமை !

புலவர் சா இராமாநுசம்

Monday, December 9, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் - பகுதி இருபது






ஈங்கிள்பர்க் (12-8-2013)

          மவுண்ட் டிட்லிஸ் மலையிலிருந்து  கீழே இறங்கினோம்
அதன் பிறகு சுவிட்சர்லந்தின் ஆறு  முக்கிய நகரங்களில் ஒன்றான லுசர்ன்
நகரைச் சுற்றிப் பார்த்தோம்

          அங்கு கண்டவற்றில் குறிப்பிடத் தக்கவை சிங்க வாகனச் சின்னம்
சுண்ணாம்புக் கல் அரண்கள், மேலும் 1333-ஆம் ஆண்டு ரியூஸ் ஆற்றின் மேல்
கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான, முழுவதும் மரத்திலான , நீண்ட பாலம்
மற்றும் நகரின் அழகிய  காட்சிகளைக்  கீழே  காணலாம்