தியாகம் தியாகமென -காந்தி
தினமும செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனைச்
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியல் தனைநாடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருக்கு ஏது எல்லை
பெற்ற விடுதலைப் பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமூடி மறைக் கின்றார்
அற்றவர் வாழ்வேப் போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம்
எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால் தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணுமா சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்!
புலவர் சா இராமாநுசம்