Friday, December 6, 2013

என் முகநூல் பதிவுகள் -ஏழு






ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு , நாமோ அல்லது சட்டத்தின் மூலமாகவோ தண்டணைத் தரமுடியும் ! அதனால்
நமக்கு கிடைக்கும் இன்பம் சில நாட்கள் மட்டுமே நிலைக்கும்! ஆனால் , அத்தவறை பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் , நாம் வாழும் நாள் வரை நமக்குஅது, இன்பம்
தரும்!


எப்படியும் வாழலாம் ,என எண்ணி வாழ்வோர் மத்தியில், இப்படிதான் வாழவேண்டுமென திட்டமிட்டு, அதாவது, வாழவேண்டிய முறைப்படி உலகில் வாழ்கின்ற ஒருவன் வானுலகில் வாழ்கின்ற தெய்வத்திற்குச் சமமாகப் போற்றப்
படுவான்


கண்ணெதிரே ஒருவரை வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட தயவு, தாட்சணியம் இல்லாமல் அவரைப்பற்றி நல்லதோ , கெட்டதோ சொல்வதில் எந்த தவறும் இல்லை! ஆனால் அவரைப் போகவிட்டு புறத்தே அவரைப் பற்றி இழித்தோ ,பழித்தோ பேசுவது மாபெரும் தவறாகும்!


நாம் யாரையாவது பார்த்து , நீ செத்துப் போறது நல்லது என்று சொல்வோமா! சொல்ல முடியுமா !ஆனா வள்ளுவர் சொல்கிறாரே!

ஒருவன் புறங்கூறி அதனால் வரும் பொய்யான வாழ்க்கையை, வாழ்வதைக்காட்டிலும் அவ்வாறு வாழாமல் இறந்து போதல் அறவழி கூறும் செல்வத்தை அவனுக்குக் கொடுக்கும் என்று!


உயிரோடு இருக்கிற வரைக்கும் தான் எவரையும் பெயரோ, உறவுமுறையோ சொல்லி அழைக்கிறோம்! உயிர் போயிட்டா
எல்லாருக்கும் ஒரேபெயர்தான்! பிணம்!


கல்லானது பிளவை பட்டால் மீண்டும் ஒட்டாது! அதுபோல சிலரோடு ஏற்பட்ட நட்பும் பிளவு பட்டால் மீண்டும் சேர்வதில்லை! ஆனால் சிலரோடு ஏற்பட்ட நட்பு , பொன் பிளவு பட்டாலும் மீண்டும் ஒன்று சேர்வது போன்று சேர்வதுண்டு! இதுதவிர சிலரோடு ஏற்பட்ட நட்பு , பிளவு பட்டாலும் நீர்மேல் கிழித்த கோடுபோல மறைந்து மீண்டும் ,விரைந்து ஒன்று சேர்ந்து விடும்!

                                புலவர்  சா  இராமாநுசம்



Wednesday, December 4, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் - பகுதி பதினெட்டு





                     ஈங்கிள்பர்க் (12-8-2013)

        வழக்கம்போல்  காலை  உணவை  முடித்துக் கொண்டு
புறப்பட்டோம்  அன்று நாங்கள் கண்ட இடம்  சுவிட்சர்லாந்தின்       அழகிய மலையில்  உயர்ந்த இடத்தில் (இரண்டாவது) உள்ள
மவுண்ட் டிட்லிஸ் மற்றும் லுசர்ன்  ஆகியன ஆகும்!

        மவுண்ட் டிட்லிஸ் கடல் மட்டத்திலிருந்து (10000) பத்தாயிரம்
அடி உயரமாகும்!  அங்கு செல்ல கேபிள் கார் மூன்று வகையில் அமைக்கப்
பட்டுள்ளன நூற்றுக் கணக்கான பெட்டிகள் மேலும் கீழும் சென்று வருவது
கண் கொள்ளாக் காட்சியாகும்! ஒரு பெட்டியில்  நம் இந்திய தேசியக் கொடி
சின்னமாக் பொறிக்கப்பட்டுள்ளது கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம்

        முதல் வகையில் ஏறி , இறங்கி, இரண்டாவது  வகையில் ஏறவேண்டும் ஒவ்வொரு பெட்டியிலும் ஆறுபேர் ஏற முடியும்  அதுபோலவே மூன்றாம் வகைப் பெட்டியிலும்  ஏற வேண்டும்                                                                                                     ஆனால் இது (மூன்றாம் வகைப் பெட்டி) வித்தியாசமாக, வட்டமான வடிவில் முப்பது நாற்பதுபேர் ஒரேநேரத்தில் ஏறி நிற்க வேண்டும் ! உட்கார இயலாது அதுமட்டுமல்ல, அது  செங்குத்தா மேலே ஏறும்போது நாலாபக்கமும் சுற்றிக் கொண்டே சென்ற காட்சி உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று ,என்று  சொன்னார்கள்!

      ஒரு வகையாக இவ்வாறு மேலே வந்து சேர்ந்தோம்!

    பனிமூடிய சிகரத்தின் அழகினையும், எம்முடன்  வந்த சிலர்
அதில் நடந்து சென்றதையும் , பனி சறுக்கு விளையாட்டு ஆடியதையும்
வாழ் நாளில் மறக்க இயலா காட்சிகளாகும்!

         படங்களை கீழே  காணலாம்!


















Monday, December 2, 2013

வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம் வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!



ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்




இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...