Friday, November 29, 2013

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!



பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
    பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
   பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
    தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
    வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்

சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
    செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்!
செல்வதும் வருவதும் அறியோமே-எடுத்து
    செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
   ஆகுமோ? என்றே குலைகிறதே!

பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
  பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
   அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
   போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
   இயல்பாய் நமக்கும் போனதுவே!


ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
   உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
   கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
    போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
   வந்திடும் மேலும் மின்வெட்டே!

                            புலவர் சா இராமாநுசம்


Wednesday, November 27, 2013

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர்



மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
மகிழும் பக்சே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
பழியும் பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும் எண்ணாதே-மேலும்
வேதனை எதையும் பண்ணாதே நீ
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
தோல்வியே உனகுலம் விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான்

புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 26, 2013

தேசியம் என்றாலே பொருளறிய தாரே !

 

தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே!
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமது இன்றே !
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்ட கொட்ட குனிவதா கேலியவர்பேச!
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்ப்பென்னும தீநம்மை-சுற்றி !


புலவர் சா இராமாநுசம்