பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்
சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
உள்ள நிலைமை இதுவாகும்!
செல்வதும் வருவதும் அறியோமே-எடுத்து
செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
ஆகுமோ? என்றே குலைகிறதே!
பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
இயல்பாய் நமக்கும் போனதுவே!
ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
வந்திடும் மேலும் மின்வெட்டே!
புலவர் சா இராமாநுசம்