Friday, November 15, 2013

ஆடுகின்றார்! ஆடுகின்றார்! நாடகம் –ஈழ ஆதரவுப் பேராலே நாடகம்





ஆடுகின்றார்! ஆடுகின்றார்! நாடகம் –ஈழ
    ஆதரவுப்  பேராலே  நாடகம்
போடுகின்றார் போடுகின்றார்! நாடகம் –ஈழப்
    போராளிப் பேராலே  நாடகம்
தேடுகின்றார் தேடுகின்றார்!  ஓட்டே! –வரும்
     தேர்தலிலே  வெற்றிபெறக் கேட்டே
கேடுதரும்  அரசியலே! போபோ!-தட்டிக்
    கேட்பவர்க்கு வைப்பதென்ன ஆப்போ

ஒருவருக்கும்  உணர்வில்லை ! இங்கே!- இதில்
    உள்நோக்கம் இருப்பதாலே எங்கே?
வருவதில்லை ஒருநாளும்  வெற்றி – வெறும்
    வாய்வார்த்தை தந்திடுமா  பெற்றி
உருவமின்றி நிழல்தேடும்  தன்மை –இன்று
   உள்ளநிலை! உணர்வீராம்! உண்மை!
பெருமையில்லை கட்சிகளே இன்றே –எடுத்துப்
    பேசுவதே செயலாதல் என்றே!?

               புலவர்  சா  இராமாநுசம்

Thursday, November 14, 2013

குழந்தைகள் தின பாடலும், என் அன்புப் பேரனும்








இளையமகள் பெற்றெடுத்த  பேரன் – கணினி
    இணையத்தை  இயக்குவதில்  சூரன்
வலைதனிலே எனக்குதவி  வருவான் –தமிழ்
    வார்தைகளை திருத்திகூட  தருவான்

அதிகாலை எழுவதுதான் தொல்லை! -ஆனால்
    அதன்பிறகு  தயக்கமது  இல்லை
புதுமாலை  போல்பொலிவு கொண்டே –பள்ளி
    போய்விட்டு திரும்புவதும் உண்டே

படியென்று  சொல்லுவது  வீணே! –அவன்
    படித்திடுவான் பாடங்களைத்  தானே
முடியென்று சொல்லுமுன் முடிப்பான்! –செயலை
    முடித்துவிட்டு  பின்பேதான் படுப்பான்

கண்ணெனவே காக்கின்றாள்! மகளே  -அந்த
    காரணத்தை நானெடுத்தே புகல
ஒண்ணெனவே பெற்றதாலே அருமை –அவன்
    ஊர்மெச்ச படிப்பதாலே  பெருமை
      

உண்ணுவதில் மட்டும்தான் தொல்லை –அதை
    உணரும்நாள் வந்திடிமா  ஒல்லை!
மண்டிவிடும் மகிழ்வாலே மேலும் –இதை
    மறவாது  நடப்பானா நாளும்

தப்பென்றால் தலைகுனிந்து  நிற்பான் -செய்த
    தப்புக்கு மன்னிப்பு  கேட்பான்
முப்பாலய் அவன்வாழ  வேண்டும் –தம்
    முன்னோரின் வழிபற்றி  யாண்டும்!

                    புலவர்  சா  இராமாநுசம்
   

Tuesday, November 12, 2013

எங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா!



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

Monday, November 11, 2013

ஐநூறு பதிவுதனைத் தாண்டி விட்டேன் –உங்கள் ஆதரவு கரத்தாலே தூண்டி விட்டீர்!





ஐநூறு பதிவுதனைத்  தாண்டி  விட்டேன் –உங்கள்
     ஆதரவு  கரத்தாலே  தூண்டி விட்டீர்!
கைமாறு  கருதாத அன்பே   கொண்டீர் –நல்
     கருத்துகளை  நாள்தோறும் வலையில் விண்டீர்
செய்மாறு நான்செய்ய அறியேன் ஒன்றே –கற்ற!
     செந்தமிழ்தான்  கைகொடுக்க துணையாய் இன்றே
உய்மாறு நான்மேலும்  வருதல்  வேண்டும் – உம்
     உறவொன்றே அருமருந்தாம்  வாழ ஈண்டும்!

நித்தமொரு கவிதன்னை எழுதத்  தானே –நான்
     நினைத்தாலும் இயலாது!  முதுமை வீணே!
சித்தமதில் எழுகின்ற  ஆர்வம்  தன்னை –உடன்
     சிதைப்பதுடன்  முதுகுவலி தந்து என்னை!
பித்தனென ஆக்குவதால் புலம்பு கின்றேன் –பொழுது
     போகவழி  இல்லாது  விளம்பு கின்றேன்!
எத்தனைநாள்  இப்படியே  கழிந்து  போமோ! – என்
     இதயத்து உணர்வெல்லாம் அழிதல்  ஆமோ!

அன்புமிகு  உறவுகளே  சொல்வேன்  ஒன்றே! –தினம்
      அனைவரது பதிவுகளை  படிக்க  நன்றே!
இன்புமிகு  ஆசைகளே என்னுள்  உண்டே –ஆனால்
     இயலாத நிலைதன்னை  நீரும்  கண்டே!
துன்பமிகு நிலையேதும் கொள்ள  வேண்டாம் !-நான்
    தொடர்வேனே ! முயல்வேனே! வலையில்  ஈண்டாம்!
என்புமிகு தோல்போல  நம்மின்  உறவே –உயிர்
     எனைவிட்டு  போகும்வரை இல்லை! மறவே!

                               புலவர்  சா  இராமாநுசம்