Saturday, November 2, 2013

விழிகளில் நீர்வடிய கண்டே னின்றே –சிங்க வெறியர்களே வன்புணர்ந்தே கொன்றா ரென்றே





விழிகளில் நீர்வடிய கண்டே னின்றே –சிங்க
    வெறியர்களே வன்புணர்ந்தே கொன்றா ரென்றே
பழிபாவம் அஞ்சாத  பாவி மக்கள் –இசைப்
    பிரியாவை சிதைத்திட்ட வெறிமிகு  குக்கல்
அழியாத வடுவன்றே உலக  ஏட்டில் – இதை
    அறிந்துமே  போவதோ!? அவனது  நாட்டில்
இழிவன்றோ இந்தியா எண்ணிப்  பாராய் –தமிழன்
    இனிமேலும் தாங்கிடான் உண்ணி ஒராய்!

சண்டியிவன் என்றெண்ணி இருக்க வேண்டாம்-நாளும்
    சண்டியவன் மிரண்டிடவே  காடாம் ஈண்டாம்
நொண்டியல மூலையில் முடங்கிப் போக – தமிழன்
     நொந்துநொந்து  நடைப்பிணமாய்  நாளும் ஆக
கண்டுமனம் கொதித்தாலே எதுதான்  மிஞ்சும் – இதிலே
    காமன்வெல்த்து மாநாடா உறங்கும்  மஞ்சம்!?
உண்டுயிங்கே தமிழ்நாடு ! உணர வைப்பார் –அன்றே
    உணர்ந்திடுவாய் ஒற்றுமைக்கே !? ஒ(வே)ட்டு வைப்பார்

                         புலவர்  சா இராமாநுசம்

Wednesday, October 30, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினாறு-ஈங்கிள்பர்க் -




                 ஈங்கிள்பர்க் (11-8-2013)

            வழக்கம்போல்  காலை  உணவை  முடித்துக் கொண்டு
புறப்பட்டோம்  அன்று நாங்கள் கண்ட இடம்  சுவிட்சர்லாந்தின்       அழகிய மலையில்  உயர்ந்த இடத்தில் உள்ள ஜங்க்ஃபிரோக் மற்றும்
இண்டர் லேகன் ஆகியன!

              இங்கே குறிப்பிடத்  தக்கது ஜங்க்ஃபிரோக்கில் அமைந்துள்ள
இரயில் நிலையமானது ஐரோப்பாவின் மிக  உயர்ந்த, கடல் மட்டத்திலிருந்து 13333 அடி  உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது

               நாங்கள்  முதலில் அங்கு செல்ல லாட்டர்பிரன்னன் என்னும் இடத்தை அடைந்து மலை இரயில் மூலம் பயணமானோம்  அதுவே இரண்டு வகையில் அமைத்திருக்கிறார்கள்  சற்று சரிவான இடத்திற் ஏற்ப ஒன்றும் சற்று செங்குத்தாக செல்ல மற்றொன்றும்  என. ஆகவே இடையில் நாங்கள் இறங்கி வண்டி மாறி ஏறி உச்சியில் உள்ள நிலையத்தை அடைந்தோம்

                 வழியில் நாங்கள் கண்ட காட்சிகளையும் மலை உச்சியில் கண்ட காட்சிகளையும்  நீங்களும்  கண்டு  களிக்க இப்பதிவிலும்  அடுத்த பதிவிலும்  வெளியிடுகிறேன்  

                    புலவர்  சா இராமாநுசம் 






















     

Monday, October 28, 2013

சூடும் சுரணையும் நமக்கில்லை –சேர்ந்து சொல்லியும் மத்தியில் கேட்பதில்லை





சூடும் சுரணையும்  நமக்கில்லை –சேர்ந்து
      சொல்லியும்  மத்தியில் கேட்பதில்லை
வாடும் மீனவர்  வாழ்வில்லை -நாளும்
      வருந்தும் அவன்குரல்  மாறவில்லை
கேடும்  செய்தவன் நாட்டிற்கே –நாம்
       கேட்டும் போவதாய் ஏட்டிற்கே
நாடும் அறிந்திட சொல்கின்றார் – தெரு
      நாயென நம்குரல் கொள்கின்றார்
              
உண்மை! தமிழா  எண்ணிப்பார் –இந்த
      உலகில் நமையார் மன்னிப்பார்
கண்ணை  விற்று ஓவியமா – என்ற
      கதைதான் மத்தியின்  காவியமா
விண்ணை முட்டும்  பெருமைதனை –அற
     வழியில் தமிழன் அருமைதனை
 திண்ணை விட்டு  எழுவாயா –வடக்கு
      திசையை நோக்கியே தொழுவாயா!
         

பதவி ஆசைகள்  போகட்டும் –ஆட்சி
    பரம்பரை  சொத்தெனல்  ஏகட்டும்
உதவி அல்லவே  உரிமையென –அதை
    உணர்ந்து செயல்படின் பெருமையென
நிதமே நடந்து கொண்டாலே –வெற்றி
     நிலைபெறும் உம்முடை  தொண்டாலே
இதுவே ! இன்றே! உள்ளவழி – எனில்
     இழிவே ! என்றும் மாறாப்பழி!
    
   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...