எங்கேயா அரசாங்கம்? இருக்கு
தென்றே –பலர்
எண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே!
வெங்காயம் விலைகூட
விண்ணை முட்டும்-ஏழை
வேதனையைச் சொல்லியழ கண்ணீர் சொட்டும்!
தங்காயம் வாடாமல்
காரில் போகும் – கட்சித்
தலைவர்களே! எண்ணுமிது! வீணா ! ஆகும்!
பொங்காத மக்களையும்
பொங்கச் சொல்லும் –எனில்
புரிந்துடனே தீர்க்கவழி தன்னை உள்ளும்!
எருமாட்டின் மீதுமழைப் பெய்தால் போல- ஏன்
இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!
திருநாட்டில்
யாராலே இந்தப் பஞ்சம்-பதுக்கல்
திருடனுக்கே அரசேதான் கொடுக்கும் தஞ்சம்!
வருநாளில் எப்பொருளும் வாங்க இயலா-ஏழை
வாடுகின்றான்! தேடுகின்றான் !வழியும் புயால
உருவானால் என்செய்வீர்!
போவீர் எங்கே – இதை
உணராது இருப்பீரேல் நடக்கும் இங்கே!
அளவின்றி விலைவாசி
உயர நாளும்- ஆட்சி
அதிகாரம் சுயநலமே குறியாய்
ஆளும்
வளமான வாதிகளாய் வலமே வருவீர்- மக்கள்
வாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்!
களமாகும் வருகின்ற
தேர்தல் காட்டும்- உடன்
கைகொடுக்க
ஏற்றதொரு திட்டம் தீட்டும்!
உளமறிய உண்மையிது!
உணர்தல் நன்றே!-ஏதோ
உரைத்திட்டேன் வேதனையை நானும் இன்றே!
புலவர் சா இராமாநுசம்