Saturday, October 19, 2013

வாழ்த்துங்கள் உறவுகளே! என்னை நன்றே! –என் வயததுவும் எண்பத்து ஒன்றாம் இன்றே!





வாழ்த்துங்கள் உறவுகளே! என்னை நன்றே! –என்
    வயததுவும் எண்பத்து  ஒன்றாம்  இன்றே!
ஆழ்த்துங்கள் மகிழ்விலேநான்  மிதந்து  போக –நம்
    அன்னைதமிழ்  என்றுமென்  துணையாய்  ஆக
வீழ்த்துங்கள் தமிழின  துரோகி  தம்மை – என்
    விருப்பமது!! இதுஒன்றே! வேண்டி  உம்மை
தாழ்த்திட்டே தலைதன்னை, வணங்கி , நாளும் – முத்
     தமிழ்வாழ நாம்வாழ்வோம் மேலும்  மேலும்!

முடிந்தவரை வள்ளுவனின வழியில் வாழ்ந்தேன்!- அது
     முடியாத  போதெல்லாம்  துயரில் வீழ்ந்தேன்
கடிந்தொருவர்  சொன்னாலும் பொறுத்துக்  கொண்டேன்- ஏற்ற
     கடமைகளை செய்வதிலும்  வெற்றி  கண்டேன்
விடிந்தவுடன்  இருள்விலகி  செல்லல் போன்றே- என்
     வேதனைக்கு வடிகாலாய் வலையும்  தோன்ற
மடிந்துவிட்ட  என்துணைவி  வரமே  தந்தாள்- என்றும்
      மறவாத  கவிதையென நாளும்  வந்தாள்!

ஆகின்ற காலமெனில்  அனைத்தும்  ஆகும் –அது
      ஆகாத காலமெனில்  அனைத்தும்  போகும்
போகின்ற போக்கெல்லாம் மனதை விட்டே –பின்
      புலம்புவதால் பயனுண்டா வாழ்வும்  கெட்டே
நோகின்ற நிலையெவர்கும் அறவே  வேண்டாம்-நல்
     நோக்கம்தான் அழியாத அறமே ஈண்டாம்
சாகின்ற வரைநானும் கவிதை  தருவேன் –வலை
     சரித்திரத்தில் எனக்குமோர் இடமே  பெறுவேன்


                   புலவர்  சா  இராமாநுசம்

Friday, October 18, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினான்கு- ஸ்டட்கார்ட்





                       ( கொலோன் 9-8-2013)
         வழக்கம் போல்  காலை  உணவை  முடித்துக்கொண்டு  நகர உலா
காண  புறப் பட்டோம் . ஆனால் அன்று பருவ நிலை சரியில்லாமல்  அவ்வப்போது  மழை பெய்ததால்  வட ஐரோப்பாவின் மிகப் பெரிய தேவாலயம் (கத்தீட்ரல் சர்ச்சு)தன்னைக்கூட உள்ளே சென்று  பார்க்கமுடிய வில்லை . பகல்  உணவை முடித்துக்  கொண்டு பயணத்தை ,ஸ்டட்கார்ட்
சென்று வழியில் செர்மனி மெர்சிடஸ் பென்ஸ் கார்  தொழிற் சாலை யைப்
பார்க முயன்றோம் நேரமாகி விட்டதால் அதும்  இயலவில்லை! முடிவாக
ஸ்டட்கார்ட் சென்று விடுதியில் தங்கினோம்
               ஸ்டட்கார்ட் 10-8 2013

     மறுநாள் காலை உணவிற்குப் பின் செர்மனியின் எழில் மிகுந்த கருமைக் காட்டின் வழியாக சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டோம்
அதன் இதயப் பகுதியான ட்ரூபாசெண்டர் என்ற இடத்தில்  உள்ள
கூக்கு கடிகாரத் தொழிற்சாலை பார்தோம் அக் காட்சிகளையும் மற்ற
இயற்கைக் காட்சிகளையும்  கீழே  காணலாம்






















Wednesday, October 16, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதிமூன்று_கொலோன்




அன்பின்  இனிய உறவுகளே!

          கடந்த ஒரு வாரமாக நான்  குடும்பத்தோடு கொடைக்கானல்
சென்றிருந்ததால் ஐரோப்பிய சுற்றுப்பயணப்பதிவு எழுத இயலவில்லை !
       (கொடைகானல் பற்றிய விபரம் விரிவாக பின்னர்  எழுதுகிறேன்)

              ( கொலோன் 8-8-2013)
       
         பகல் உணவு  முடித்ததும்  எங்கள்  பயணம்
கொலோன்  நகரம் நோக்கி  புறப்பட்டது. வழியில், கொலோன்  நகருக்கு
சற்று முன்னதாக  பெரும் பள்ளத் தாக்கில் ஓடும்  ரெயின் நதியில் நீண்ட
நேரம் படகுச் சாவாரி செய்தோம்! மிக மிக அழகிய காட்சிகள் ! இயற்கையின் அழகைக்  கண்டவாறே  படங்களை  எடுத்தோம்

           இறங்க மனமில்லாமல் இறங்கி பயணத்தைத்  தொடங்கி
கொலோன்  நகரில் உள்ள தங்கும் விடுதியை அடைந்தோம்!

           பின் வரும் படங்கள், படகுச் சவாரியின்  போது எடுக்கப் பட்டன!