வாழ்த்துங்கள்
உறவுகளே! என்னை நன்றே! –என்
வயததுவும் எண்பத்து ஒன்றாம்
இன்றே!
ஆழ்த்துங்கள்
மகிழ்விலேநான் மிதந்து போக –நம்
அன்னைதமிழ்
என்றுமென் துணையாய் ஆக
வீழ்த்துங்கள்
தமிழின துரோகி தம்மை – என்
விருப்பமது!! இதுஒன்றே! வேண்டி உம்மை
தாழ்த்திட்டே
தலைதன்னை, வணங்கி , நாளும் – முத்
தமிழ்வாழ நாம்வாழ்வோம் மேலும் மேலும்!
முடிந்தவரை
வள்ளுவனின வழியில் வாழ்ந்தேன்!- அது
முடியாத
போதெல்லாம் துயரில் வீழ்ந்தேன்
கடிந்தொருவர் சொன்னாலும் பொறுத்துக் கொண்டேன்- ஏற்ற
கடமைகளை செய்வதிலும் வெற்றி
கண்டேன்
விடிந்தவுடன் இருள்விலகி
செல்லல் போன்றே- என்
வேதனைக்கு வடிகாலாய் வலையும் தோன்ற
மடிந்துவிட்ட என்துணைவி
வரமே தந்தாள்- என்றும்
மறவாத
கவிதையென நாளும் வந்தாள்!
ஆகின்ற காலமெனில் அனைத்தும்
ஆகும் –அது
ஆகாத காலமெனில் அனைத்தும்
போகும்
போகின்ற போக்கெல்லாம்
மனதை விட்டே –பின்
புலம்புவதால் பயனுண்டா வாழ்வும் கெட்டே
நோகின்ற நிலையெவர்கும்
அறவே வேண்டாம்-நல்
நோக்கம்தான் அழியாத அறமே ஈண்டாம்
சாகின்ற வரைநானும்
கவிதை தருவேன் –வலை
சரித்திரத்தில் எனக்குமோர் இடமே பெறுவேன்புலவர் சா இராமாநுசம்