Saturday, October 5, 2013

வேங்கடவன் துதி



சூழும்  இடர்தன்னை  சுடர்கண்ட  பனியாக்கும்

     ஏழுமலை  யானே  எனையாளும்  பெருமாளே
வாழும்  நாளெல்லாம்  உனைவணங்கி  நான்வாழ
     பாழும்  மனந்தன்னை  பதப்படுத்த  வேண்டுகிறேன்

அன்னை  அலர்மேலு  அகிலாண்ட  நாயகியே
     பொன்னை  வேண்டியல்ல  பொருளை  வேண்டியல்ல
உன்னை  வணங்குதற்கே  உயிர்வாழ  விரும்புகின்றேன்
     என்னை  ஆட்கொள்வாய்  எனையாளும்  தாயேநீ

பஞ்சுப்  பொதிபோல  பரவி  வருகின்ற
     மஞ்சு  தவழ்ஏழு  மலையானே  கோவிந்தா
தஞ்சம்  நீயென்றே  தலைவணங்கும்  என்போன்றார்
     நெஞ்சில்  நீங்காது  நிலைத்திருக்க  வேண்டுகிறேன்

வாழிவாழி  யென  வானோர்கள்  கூத்தாட
     ஆழிகடைந்  தமுது  அளித்தவனே  மங்கையர்கள்
தாழிகடைந்  தெடுத்த  தயிர்வெண்ணை  திருடியவர்
      தோழி  பலர்துரத்த  தொடர்ந்தோடி  ஒளிந்தவனே

தத்தம்  குறையெல்லாம்  தடையின்றி  நீங்குமென
     நித்தம்  உனைநாடி  நீள்வரிசை  தனில்நின்று
சித்தம்  மகிழ்வுடனே  செப்புகின்ற  கோவிந்தா
     சத்தம்  உன்செவியில்  சங்கொலியாய்  கேட்கிறதா

வெண்ணை  உண்டவாய்  விரிய  வியனுலகு
     தன்னைக்  கண்டதாய்  தடுமாறி  மகிழ்ந்தாட
மண்ணை  அளந்தவனே  மாபலியின்  தலையோடு
     விண்ணை  அளந்தவனே  விமலனே  வணங்குகிறேன்

மலையில்  வாழ்பவனே  மலையை  நீதூக்கி
     தலையின்  மேல்வைத்தே  ஆவினத்தை  காத்தவனே
அலையில்  கடல்மீது  ஆனந்தப்  பள்ளியென
     இலையில்  துயின்றவனே  இறைவாநான்  தொழுகின்றேன்

ஆதிமூல  மென்ற  அபயக்குரல்  வந்துன்
     காதில்  விழச்சென்று  காத்தவனே  கோவிந்தா
வீதிதனில்  வருவாய்  வீழ்ந்து  வணங்கிடுவார்
     தீதுதனை  முற்றும்  தீர்த்திடுவாய்  கோவிந்தா

எங்கும்  உன்நாமம்  எதிலும்  உன் நாமம்
     பொங்கும்  உணர்வெல்லாம்  போற்றும்  திருநாமம்
தங்கும்  மனதினிலே  தடையின்றி  உன்நாமம்
     பங்கம்  அடையாமல்  பாஞ்சாலி  காத்ததன்றோ

அம்மை  அலர்மேலு  அப்பன்  திருமலையான்
     தம்மை  நாள்தோறும்  தவறாமல்  வணங்கிவரின்
இம்மை  மறுமையென  எழுபிறவி  எடுத்தாலும்
     உம்மை  மறந்தென்றும்  உயிர்வாழ  இயலாதே

 பாடி  முடித்திவிட  பரந்தாமா  உன்அருளை
     நாடி  வருகின்றேன்  நாயகனே  வேங்கடவ
 தேடி  வருவார்கு  திருமலையில்  உனைக்காண
     கோடிக்  கண்வேண்டும்  கொடுப்பாயா  பரந்தாமா

 முற்றும்  உன்புகழை  முறையாக  நான்பாட
     கற்றும்  பல்லாண்டு  காணாது  தவிக்கின்றேன்
 பற்றும்  அற்றவரும்  படைக்கின்ற  பிரம்மாவும்
     சற்றும்  அறியாருன்  திருவடியும்  திருமுடியும்

 வேதத்தின்  வித்தேயுன்  விளையாட்டை  யாரறிவார்
     நாதத்தின்  சத்தேயுன்  நாடகத்தை  யாரறிவார்
 பேதத்தை  கொண்டவுள்ளம்  பெருமாளே  என்போன்றார்
     சோகத்தை  நீக்குமென  சொல்லியிதை  முடிக்கின்றேன்

  தாங்கும்  நிலையில்லா  தடைபலவே  வந்தாலும்
      நீங்கும்  படிசெய்யும்  நிமலனே  நாள்தோறும்
  தூங்கும்  முன்வணங்கி  தூங்கி  எழவணங்கும்
      வேங்கி  தாசன்நான்  விடுக்கின்ற  விண்ணப்பம் 

  செல்லும்  திசைமாறி  சென்றுவிடும்  கப்பலென
      அல்லும்  பகலுமென்  அலைகின்ற  உள்ளத்தை
  கொல்லும்  அரவின்மேல்  கொலுவிருக்கும்  கோவிந்தா
      ஒல்லும்  வழியெல்லாம்  உனைவணங்கச்  செய்திடுவாய்!
 
    ( விண்ணில்  வாழும், என் துணைவியின் விருப்பதிற்கேற்ப
மண்ணில்  வாழும் நான்  அன்று பாடியது! இன்று, புரட்டாசி மூன்றாம்  சனி! அவள் , காண ....... மீண்டும் வருகிறது!  காண்பாளா......!?   )



                             புலவர் சா இராமாநுசம்

Friday, October 4, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினொன்று ஆம்ஸ்டர்டாம்



                 ஆம்ஸ்டர்டாம் (7-8-2013)

       முதல்  நாள்  நீண்ட  தூரம்  பேருந்து  பயணம்!  என்றாலும் வழக்கம் போல  காலையில் எழுந்து, தயாராகி உணவை முடித்துக்
கொண்டு நகர் உலா காண  புறப் பட்டோம்

       நாங்கள் அன்று அங்கு  கண்டவை , மிகப் பெரிய மாதிரி
மாநகரம், நெதர்லாந்தின் அடையாளச்  சின்னமான  காற்றாலை.  மரத்தில்
காலணி  செய்யும் தொழிற் சாலை , இறுதியாக கங்கைக்கும்  மேலாக
தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடும் நதியில் கப்பல்  போன்ற  படகுச் சவாரி!
என்பன  ஆகும்!

         முதலில்  பிரம்மாண்ட மான முறையில் மிகப்  பெரிய
பரப்பளவில்  அமைக்கப் பட்டிருந்த  மாதிரி  நகரின் படங்களை
கீழே  காணலாம் மேலும், தங்கிய விடுதி  காற்றாலை மர காலணி
தொழிச்சாலை  காணலாம்

















Wednesday, October 2, 2013

தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!





தன்னலம்  ஏதும்  இன்றி- யாரும்
    தன்கென  நிகரும்  இன்றி!
இன்னலே நாளும்  கொண்டார் –காந்தி
    இந்திய விடுதலை கண்டார்!
மன்னராய்ப்  பலரும்  இங்கே –பதவி
    மகுடமே  சூட  எங்கே?
பொன்நிகர்  விடுதலை  காணோம்-அந்தோ
     போயிற்று  அனைத்தும்  வீணாம்!

தேசத்தின்  தந்தை  நீரே –என்று
   தெரிந்தவர் எத்தனைப் பேரே!
நாசத்தை நாளும் செய்தே –சொந்த
    நலத்தையே பயனாய் எய்தே!
மோசத்தை சட்டம்  ஆக்கி –என்றும்
     முடிவிலா  வறுமை தேக்கி!
பேசத்தான் வழியே இல்லை! –எதிர்த்து
    பேசிடின்! வருதல்  தொல்லை

ஊற்றென ஊழல்  ஒன்றே –இன்றே
   உலவிட நாட்டில் நன்றே!
காற்றென  வீசக்  கண்டோம் –துயரக்
    கண்ணீரால் கவிதை  விண்டோம்
ஆற்றுவார்  எவரும் உண்டோ! –தூய
    அண்ணலே உமதுத்  தொண்டோ!
போற்றுவார்  எவரும் காணோம் –அந்தோ
    போயிற்று  அனைத்தும்  வீணாம்

         புலவர்  சா இராமாநுசம்


Monday, September 30, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பத்து புரூசல்ஸ்



               புரூசல்ஸ் (6-8-13)

        பாரிஸ்  நகரை விட்டு அதி காலையே புறப்பட்டு  மிகவும்
வசதியான பேருந்து மூலம்  புரூசல்ஸ் நோக்கிப்  புறப்பட்டோம்

        இங்கே நான்  குறிப்பிட  விரும்புவது , அந்த, ஒரே பேருந்துதான்
நாங்கள் ரோமில் விமானம் ஏறும்வரை (மற்ற எல்லா நாடுகளையும் சுற்றிவர) எங்களுக்குப்  பயன் பட்டது! ஆயிரம் கணக்கான  மைல்கள்!
பதினைந்து நாட்கள்! எவ்வித  இடையூறும் இல்லாது சென்றது ! மிகவும்
பாராட்டத்தக்கது.

          பசுமை நிறைந்த காட்சிகளையும் மலைகளைக் குடைந்து (பல
மைல்கள்) அமைக்கப்பட்டிருந்த குகைகள்  வழியாகவும்  வியப்புடன்
பார்த்துக் கொண்டே , சுமார் ஐந்து  மணி நேரம் பயணம் செய்து புரூசல்ஸ்
நகரை அடைந்தோம்.

          அங்கு பார்க வேண்டிய இடங்களாக , மன்னேகன் சிலை, நகரின்
அடையாளச் சின்னமாக சிறுவனின் நீருற்று சிலை!  நகர மன்றம் இணைந்த
பெரிய மைதானம்  இரும்பு உருக்காலை இன்னும் சிலவற்றை  வண்டியில்
இருந்தவாறும், இறங்கியும்  பார்த்து படமெடுத்தோம் 
          
           மீண்டும்  புறப்பட்டு  இரவு ஆம்ஸ்டர்டாம் சென்று  தங்கினோம்

         படங்களைக்  கீழே  காணலாம்





















இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...