Friday, September 20, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி-ஆறு





                இலண்டன்(-3-8-2013)

    இனிய உறவுகளே
சென்ற பதிவின் இறுதியில்  கண்ட  படமானது  இலண்டன்  ஐ என்று
சொல்லப் படுகின்ற ( மிகமிக) மெதுவாக ஊர்ந்து  சுற்றும் இராட்சத  இராட்டினம் ஆகும் அது ஒரு சுற்றுவர  முப்பது  நிமிடங்களாகின்றன
அதில்  காணப்  படும் பல பெட்டிகளில் மக்கள் அது மெதுவாவே நகர்வதால்
விரைந்து இறங்கவும் வரிசையில் நிற்போர் பத்து, பதினைந்து வரை ஏறவும்
முடிகிறது மத்தியில் என்னைப்  போன்ற வயதானவர்கள் அமர (நாலுபேர்)
நீண்ட பலகையும்  உள்ளது அதில் ஏறினோம்

       மேலே செல்ல செல்ல  இலண்டன்  எழில் மிகு தோற்றம் படிப்படியாகத் தெளிவாகத் தெரிந்தது  இரவு எட்டு மணிக்குமேல்
தான் அங்கு கதிரவன் மறைவதால்  நகரின் நாலபக்கமும்  கண்டு அனைவரும் அங்கும் இங்கும்  ஓடி படமெடுத்தார்கள் நானும்  பட
மெடுக்க முயன்ற போது ஏமாற்றமே அடைந்தேன் .  காரணம்
என் புகைப்பட கருவியின் மின்விசை தீர்ந்துவிட்டது.

         உடல் சோர்வோடு , மனச் சோர்வும் சேர்ந்து விட, நான்
இருக்கையில் அமர்ந்தேன் ஆனாலும் அவ்வப்போது எழுந்து நின்றும் ஓரமாகச் சென்றும் கண்டு  இரசித்தேன் உச்சியில் சென்ற போது
நகரம் முழுவதும்  காண முடிந்தது  அடடா! என்ன  அழகு!
காலம் கழிய சுற்றும் முடிய  ஏறியவாறே அதை விட்டு  விரைந்து இறங்கினோம்

       அனைவரும்  ஒன்று சேர, மணி எட்டு !  இரவு  உணவு  நேரம்
(எங்கள் குழவுக் கென்று,ஒதுக்கப்பட்டது. காலம் தவறின் காத்திருக்க நேரும்)
உரிய நேரத்தில் சென்று உண்டு முடித்தபின் தங்கும் விடுதிக்குச் சென்று விட்டோம்

             இலண்டன்(-4-8-2013)

       மறுநாள்  காலை  ஏழுமணிக்கே  எங்கள்  பயணம்  தொடங்கியது
காரணம் இராணியாரின்  அரண்மனையில் காவலர்களின்  பணிமாற்ற அணி
வகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கு மென்றும் அது எட்டு மணி அளவில்  நடைபெறுமென தெரிய  எங்கள் வழிகாட்டி வண்டியில் சுற்றிவர  நேரமாக்கும் என்று குறுக்கு வழியில் செல்லலாம் எனக் கூறி வண்டியை  விட்டு இறங்கி தன் பின்னால் நடந்து வரச் சொன்னார்

       விமான நிலையத்தில்  வந்தது சோதனை! இங்கே  வந்தது வேதனை
அனைவரும் வேகமாக நடக்க என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை ! நீண்ட தூரம்(எனக்கு) !  சரிவும் , மேடுமாகவும் இருக்கவே  மூச்சு வாங்கியது
எப்படியோ நானும் சென்று  சேர்ந்தேன்.

        ஏராளமான  மக்கள் அணிவகுப்பைக் காண குவிந்து இருந்தனர்
மணி , எட்டைத் தாண்டியும்  அணிவகுப்புக்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை முடிவில் (ஒன்பது மணியளவில்) வழிகாட்டி ,அன்று
அணிவகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்து தெரிவித்தார் பெரும்
ஏமாற்றம் அனைவருக்கும் ஏற்பட்டது

       அதன் பிறகு அரண்மனையின்  உள்ளே செல்ல மீண்டும்
வாயிலை  நோக்கி நடந்தோம் முன் அனுமதி ஏற்கனவே பெற்றிருந்தால்
காத்திருக்க  தேவையில்லாமல்  போயிற்று . ஆனால் ஒவ்வொரு குழுவாக
 உள்ளே  அனுப்புவதாலும் அரண் மனை வாயில் சற்று தூரமாக இருப்பதாலும்  உள்ளே படிகள்  ஏறி இறங்க வேண்டி இருக்கும் என்
பதையும்  அறிந்து நொந்து போனேன்!  ஏற்கனவே நீண்ட தூரம்  நடந்தும்
நின்றும் இருந்ததால்  என் கால்கள்  தன் சக்தியை முழுதும்  இழந்து விட்டன

     எனவே என்னால்  யாருக்கும் (உடன் வந்த) தடை ஏற்படக்
கூடாது என்று எண்ணி நான்,  ஒரு முடிவுக்கு வந்தேன்………….

          மீண்டும்  சந்திப்போம்!

                     புலவர்  சா  இராமாநுசம்
     

Wednesday, September 18, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி - ஐந்து





                    இலண்டன்(-3-8-2013)

         தேம்ஸ்  நதிக்கரையைக்  விட்டு மீண்டும்  பேருந்தில்
ஏறி பயணத்தை தொடந்தோம்  சைக்கிள்  பேரணியின் காரணமாக
சில இடங்களை  இறங்கிப் பார்க்க முடியாமல்  வண்டியில் மெதுவாகச்
சென்றவாறே பார்த்தோம்  பேரணி  கலையத் தொடங்கியது

           நகரின் மத்தியில் ஓரிடத்தில்  வண்டி நின்றது அங்கே ஒரு
சதுக்கம்! அதில்  சிங்கம் ஒன்று  மிகமிகப்  பெரியவடிவில் கல்லில்  சிலையாக  இருந்தது  மேலும்,  உயர்ந்த தூண் ஒன்றும்  மேடையில்
கோழிசிலை
ஒன்றும் அங்கே இருந்தன!  மக்கள் அவற்றின் மிக அருகே  சென்று

புகைபடங்கள்  எடுத்தனர்  கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் தொலைவில் இருந்தே  எடுத்தேன்

            பகல்  உணவு  உண்ணப்  புறப்பட்டோம்   தரமான உணவு
இந்தியன் உணவு விடுதியில் !ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது   அனைவரும்
உண்டபின் புறப்பட்டோம்  வழியில் இலண்டன் வீதிகளை வண்டியில்  போகும் போதே படமெடுத்தோம்  சிலவே நன்றாக வந்தன மீண்டும்
மிகப் பெரிய சதுக்கம், (பெயர் டிரஃபாஸ்கர்)! அரண்மனை, சிலருடைய சிலைகள்  காணப் பட்டன  பலரும் அவற்றை படமெடுக்க நானும்
எடுத்தேன்.
          அடுத்து நாங்கள்  சென்ற இடம் , மேடம் துசாட்ஸ் மெழுகுச்
சிலைகள் உள்ள அருங்காட்சியகம் பல வாயில்கள்  இருந்தாலும் எங்கும்
நீண்ட வரிசை  எங்கள் குழுவுக்கு முன்னரே முன்பதிவு செய்திருந்ததால்
எளிதாக  உள்ளே  சென்றோம்

          ஏகப்பட்ட சிலைகள் !அனைத்தும் சிலைகள்  என்று நினைக்க
இயலாதவாறு  உயிருடன்  கண் முன் தோற்றம் அளிப்பதாவே  கருத
முடிந்தது கூட்ட  நெரிசல்  தாங்க முடியாமல் நானும் என் நண்பரும் ஒருசில சிலைகளையே பட மெடுத்துக் கொண்டு ஒருமணி நேரத்திலேயே
வெளியில்  வந்து  அமர்ந்து கொண்டோம்!

          கண்ட  காட்சிகள்  கீழே……..














 

Monday, September 16, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி - நான்கு






                 இலண்டன்(-3-8-2013)


      காலையில் அனைவரும்   தயாராகி முன்னரே  வந்துள்ள
பேருந்தில்  ஏறி பயணத்தைத்  தொடங்கினோம் நாங்கள்  பார்க்க வேண்டிய
இடங்களை ( திட்டமிட்ட வாறு)  முதற்கண்  சுவாமி நாரயணன் கோவிலிக்குச்
சென்று இறைவனை  வழிபட்டோம்  அதன் பின் நகர உலா தொடங்கியது
சற்று தாமதமாக எங்கள் வழிகாட்டி வர புறப்பட்டோம்

      இலண்டன்  வீதிகளில் எங்கள்  பேருந்து செல்ல ஆங்காங்கே உள்ள
முக்கிய  இடங்களைப் பற்றி வழிகாட்டி குறிப்புகளைக் கூறிக் கொண்டு வரவும் பேருந்தில்  அமர்ந்த வாறே  கேட்டுக் கொண்டே  நகரின் மையப்
பகுதிக்கு வந்தபோது  அடியோடு போக்கு வரத்து  தடைபட்டது

      காரணம் அன்றைய தினம் இலண்டனில் சைக்கிள் பேரணி  தினமாம்
புற்றீசல் போல நாலா பக்கமும் இருந்து ஆயிரம் கணக்கில் சைக்கிளில்
வந்தனர்! ஆண், பெண் குழைந்தைகள் என எவ்வித ஆரவாரமும் இன்றி
அமைதியாகச்  சென்றது  கண்கொள்ளா காட்சி!  என் மனதில் நம் நாட்டில்
நாம் நடத்தும்  ஊர்வலம் பற்றிய காட்சி,மாட்சி நினவுக்கு வந்தது  அமைதி
ஊர்வலம் கூட  இங்கு அமைதியாகப் போவதில்லையே!

      இதன் காரணமாக  பிரிட்டன் பாராளும் மன்றத்தைக கூட  வண்டியில்
அமர்ந்தவாறேதான்  பார்க்க முடிந்தது ஒரு வழியாக அழகு மிக்க தேம்ஸ் நதிக் கரையிலே சென்று இறங்கினோம் அங்கே கண்ட காட்சிகளை பின் வரும் புகைப் படங்கள்  மூலம் அறியலாம் முலில்  வருவது நாராயணசுவாமி திருக் கோயில்.















        மற்றவை  நாளை.......!

                        புலவர்  சா  இராமாநுசம்