Friday, September 13, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி 3





  நானும் இறங்கி  நடந்தேன்!  நடந்தேன் என்று சொல்வதை விட
தள்ளாடினேன் என்பதே  உண்மை! ஒரு வழியாக நகரும்  நடைபாதை வழியாக சோதனை நிலையத்தை  அடைந்தோம்

            அங்கேதான்  எனக்கு அதிர்ச்சி  காத்திருந்தது  வரிசையில்  நான் மூன்றாவது ஆளாக நின்றிருந்தேன்  முன்னால்  சொன்ற
அனைவருடைய  கடவுச் சீட்டை சோதித்ததோடு  வலது கை கட்டை
விரல் ரேகையையும்  பதிவு செய்தார்கள்! ரேகை, சென்னையில் நேரில்
சென்று  விசா பெற்ற போது எடுத்ததோடு ஒத்திருக்கிறதா என்று
பார்க்கிறார்கள்.

            என் முறை  வந்ததும்  நான் சென்று கட்டைவிரலின் ரேகையைப் பதிவு செய்தேன் விரலை  நன்றாக அழுத்த  வேண்டும்
என்னால்  இயலவில்லை  விரல்  லேசாக நடுங்கு வதால் ரேகை 
சரியாகப் பதியவே இல்லை ! நீண்ட நேர விமானப் பயணம் என்
உடலை மிகவே பாதித்துவிட்டது  என் உடலே சிறிது நடுக்குவதை
நானே  உணர்ந்தேன்

            பலமுறை  முயன்றும்  தோல்விதான்!  முழுகையையும்
 இடது, வலது  என்று மாறி மாறி  வைத்தும்  பலனில்லை அவனுக்கே
அலுத்து விட்டது  என்னை சற்று ஓரமாக  தள்ளி நிற்கச் சொல்லி
அடுத்தவர்களை  சோதிக்கத்  தொடங்கினான்  தள்ளி நின்ற  எனக்கோ
லேசாக நடுங்கிக் கொண்டிருந்த உடலோடு உள்ளமும்  சற்று  நடுங்கத்
தொடங்கியது

          வந்த அனைவரும்  சோதனை  முடிந்து உள்ளே  சென்று விட
நான் மட்டும்  தனியாக  நிற்கிறேன்  அந்தப் பக்கம் அமைப்பாளர்  திரு
சாமிநாதனும்  எம்பரர்  அமைப்பாளர்  இராசேந்திரனும் கவலையோடு
காத்திருந்தார்கள் என்னை  சோதித்த அலுவர் எழுந்து  உள்ளே  சென்றார்
திரும்பி வந்த அவரோடு ஒரு அம்மையார்  வந்தார்  அவரும் பலமுறை
சோதித்து  விட்டு   தோல்விதான்  கண்டார் பின்பு  அவர்கள்  இருவரும்  ஏதோ பேசிக் கொண்டே  என்னிடம்  ஏதும்  சொல்லாமல்  மீண்டும்
உள்ளே  சென்றார்கள்

            ஐந்து நிமிடங்கள்  இருக்கலாம்! அதற்குள் நான்  பட்ட  நரகவேதனை , மரண தண்டனையை எதிர்நோக்கும் கைதியைப் போல
துடித்துப் போனேன்
            மீண்டும்  வந்தார்கள்  என்னிடம் ஏதும்  கேட்க  வில்லை
என்னுடைய  கடவுச் சீட்டை எடுத்து  அணுமதி முத்திரையைக்  குத்தி
புன்னகையோட என்  தோளில் அன்போடு தட்டி  உள்ளே  போகச் சொன்னார்கள் வேதனையின்  விளிம்பில் நின்றுகொண்டிருந்த  நானோ
குருடன் கண் பெற்றதைப்  போல உள்ளே சென்றேன்

          கிட்டத் தட்ட என்னால் ஒரு மணிநேரம் தாமத மாகிவிட்டது
அனைவரும்  அவரவர் பெட்டிகளை  எடுத்துக்  கொண்டதோடு என்
பெட்டியையும்  எடுத்து வைத்திருந்தார்கள் . விமான நிலையத்திலிருந்து
வெளியே  வந்த நாங்கள் முன்னரே  காத்திருந்த பேருந்தில் ஏறினோம்

         பேருந்து நகரின் எல்லைலையைக்  கடந்து புற நகர் பகுதியில்
அமைந்துள்ள  ஒரு பெரிய  தங்கும்  விடுதி முன் நின்றது அனைவரும்
இறங்கினோம்  இரவு உணவும் அங்கேயே  தயராக இருந்ததால் உணவை
உண்டபின்  அவரவருக்கு ஒதுக்கப் பட்ட(இரண்டுபேருக்கு ஒன்று) அறைக்கு
சொன்றோம் காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும் என்றும்
சொல்லப்பட்டது

         இத்துடன் (இப் பதிவோடு) என்  சுய வரலாற்றை முடித்துக் கொள்கிறேன்  அடுத்த பதிவு முதல் தல வரலாறு தொடங்கும் என்ப
தையும் முதற்கண் இலண்டன்  பற்றி  எழுதுகிறேன் என்பதையும்
தெரிவித்துக்  கொள்கிறேன்

           மீண்டும் சந்திப்போம்
                              புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 11, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம். பகுதி இரண்டு!





 அகில பாரத மூத்த குடிமக்கள்  சங்கமும்   கோவை  எம்பரர்  டிரேவல் லைனும்  சேர்ந்து   திட்டமிட்டிருந்த படி ஆகஸ்டு முதல் தேதியே  எங்கள்
பயணக் குழு  சென்னை  வந்து . பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள சுதா விடுதியில் தங்க,  நானும் அன்று இரவே சென்று அவர்களோடு சேர்ந்து  விட்டேன்!

    மறுநாள்  (2-ம்தேதி) அதிகாலையே நாங்கள்  அனைவரும்  தயாராகி எங்கள்  பொருள்களை  எல்லாம்  எடுத்துக்  கொண்டு  கீழே  வந்தோம்
அங்கே   எங்களை  விமான நிலையத்திற்கு  அழைந்துச்  செல்ல  பே,ருந்து
ஒன்று  நின்றிருந்தது  எங்கள்   உடமைகளை   அதிலே ஏற்றியபின் காலை
உணவும் பையில் போட்டு  தந்தார்கள் அதோடு பேருந்தில்  ஏறினோம்
பயணம்  தொடங்கியது

       ஏழுமணியளவில்  விமான  நிலையத்தை  அடைந்தோம்  எங்கள்
குழுவில் மொத்தம் ஐம்பது பேர்  இருந்தோம்  அனைவரும்  வரிசையாகச்
சென்று  நிலையத்துள்  நுழைந்தோம்

       எங்கள் பயணம்  இலண்டன்  செல்ல  கொழும்பு வழியாக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது  ( ஸ்ரீலங்காஏர்வேஸ்) எனவே நாங்கள் அதற்கு ஏற்ப
உரிய இடங்களில் நின்று  கடவுச் சீட்டையும்  பயணச்சீட்டையும் காட்டி
பெட்டிகளை ஒப்படைத்து விட்டு  விமானத்தில்  ஏற அணுமதி சீட்டையும் இருக்கை எண்களையும்  பெற்றோம்

       கொழும்பு  செல்லும்  விமானம் புறப்படும் நேரம்  பத்து மணி முப்பது நிமிடம்  என்பதால் அமைதியாக  மேலே(முதல் தளம்) சென்று
கொண்டு  வந்திருந்த  காலை  உணவை உண்டோம் அதன் பிறகு சோதனை
அதிகாரிகள் எங்களுடைய கைபை தொலைபேசி உட்பட உடல் முழுவதும் சோதனைக் கருவி மூலம் சோதனை சொய்தார்க்கள்  கிட்டத்தட்ட  பத்து
மணி அளவில்  விமானத்தில்  ஏற அறிவிப்பு  வர  நாங்கள் உள்ளே
சென்று அவரவர்களுக்கு  உரிய இருக்கையில்  அமர்ந்தோம்

     விமானத்தில்  பழச்சாறும்  காலை  உணவும்  வழங்கினார்கள் எங்களால்  காலை உணவை  முன்பே முடித்து  விட்டதால் சாப்பிட  இயலவில்லை . ஒரு மணி பத்து நிமிடங்கள் ! கொழும்பு வந்துவிட்டோம்
அவரவர் கைபையோடு விமானத்தை விட்டு  இறங்கி நிலையத்தின்  உள்ளே
சென்று  அமர்ந்தோம்

      பகல்  ஒரு மணி முப்பது நிமிடத்திற்கு தான் இலண்டன் விமானம்
புறப்படும்  நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க  வேண்டியதாயிற்று  அங்கும்
சோதனை  மிகவும்  கடுமையாக இருந்தது பெல்டு  காலணி களைக்  கூட அகற்றச் சொன்னாகள் அனைத்தையும்  முடித்துக் கொண்டு நாங்கள் இலண்டன்  விமானம்  ஏற அறிவிப்பை  எதிர் பார்த்து  காத்திருந்தோம்!

      அறிவிப்பு  வரவும்  முறைப்படி  ஏறி  விமானத்தில்  அமர்ந்தோம்
குறித்த  நேரத்தில் விமானம்  கிளம்பியது ஏறத் தாழ அதில்  முன்னூறு
பயணிகள் இருந்தார் கள்  புறப்பட்ட சிறிது நேரத்துக் கெல்லாம்  பகல் உணவு வழங்கினார்கள் பசியோடு  இருந்ததால் உணவு  சுவையாகவே
இருந்தது பயணநேரம் பதினான்கு மணி என்று அறிந்த போது நான்  மிகவும்
கலங்கிப்  போனேன்  அவ்வளவு  நேரம் ஒரேயிடத்தில்  உட்கார்ந்து  வர என்னால் முடியுமா என்ற கேள்வி  என்னுள்  எழ இப் பயணத்திற்கு  நான்
ஆசைப்பட்டது  தவறோ என எதிர் கேள்வியும் உள்ளத்தில்  தோன்றியது

     எப்படியோ விமானம் என்னையும் , என் எண்ணங்களையும்  சுமந்து
கொண்டு  தன்  போக்கில் பறந்து  கொண்டிருக்க  நேரம்  ஓடிக்  கொண்
டிருந்தது  விமான  ஓட்டி மிகவும் திறமை சாலியாக இருந்ததால் இறுதி
வரை குலுக்கலோ ஆட்டமோ தீடிரென்று ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல்
பறந்துச்  சென்றது  அவரது திறமைக்குச் சான்றாகும் இடையிடையே
எங்களுக்கு  பழச்சாறும்,  ரொட்டியும்  காபி டீ குடிநீர் அளவின்றி  வழங்கினார்கள்.

      நான் இரண்டு மூன்று  முறை  இருக்கையை  விட்டு  எழுந்து
 நின்றும்  சற்று நேரம் நடந்தும் என் கால்வலியைச்  சற்று குறைத்துக்
 கொள்ள முயன்றேன் சிலநேரம்  கண்துயின்றேன் !
     
       ஒவ்வொருவர்  இருக்கைக்கும்  முன்னால் தொடுதிரை இருந்தன!
அதில் திரைப் படங்களும்  விமானம் தற்போது எங்கே  பறந்து  கொண்டு
இருக்கிறது  என்ற  விபரமும் காட்டபட்டன . ஒவ்வொருநாடாக  விமானம்
கடந்தபோது  நான் அந்நாட்டில்  வாழும் நம்  வலையக உறவுகளை கண்முன் கொண்டு வர மலரும் நினைவுகளாக அவை தோன்றின! கீழே  எப்போது  பார்தாலும் கதிரவன் ஓளி  வீசிக் கொண்டிருந்தான் பகலும் எங்களோடு பயணம் செய்தது மிகவும் வேடிக்கையாக  இருந்தது

       ஒரு நேரத்தில்  பலரும்  கீழே  குனிந்து பார்க்க  , கருங்கடலுக்கு
மேலே பறந்து கொண்டிருப்பது தெரிந்தது,  தெளிவான காட்சிகள்! அடடா!
என்ன அழகு! கருங்கடல்  என்பதற்கு ஏற்ப அதன்  நிறமும்  ஆங்காங்கே
பனி  மலைகளும்  கண் கொள்ளாக்  காட்சி! அது, எழுதித்  தெரிவதல்ல
நேரில்  காண வேண்டிய ஒன்று!

       ஒருவழியாக  இலண்டனை  விமானம்  நெருங்கி விட்டத்தை
அறிந்தோம்   அதுபோது இலண்டனின் நேரம்  இரவு பத்து மணி தரை
இறங்க விமானம் தாழப்  பறந்த போது  இலண்டன் மாநகரம்  ஒளி வெள்ளத்தில்  மிதந்தது

        விமானம் தரை  இறங்கியதும்   அனைவரும் தம்தம் கைபைகளோடு இறங்கினார்கள்  . நானும் இறங்கி  நடந்தேன்


     ஆனால்?? இலண்டன் விமான  நிலையத்தில் , மிகப் பெரிய
அதிர்ச்சி , எனக்கு, எனக்கு மட்டுமே, காத்திருப்பது  தெரியாமல்…….?

             மீண்டும்  சந்துப்போம்!

                       புவலர் சா  இராமாநுசம்

    

Monday, September 9, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் . பகுதி -1



அன்பின்  இனிய  உறவுகளே!
              வணக்கம்!

         நான்  முன்னரே  அறிவித்திருந்தவாறு   என்  ஐரோப்பிய  சுற்றுப்
பயணத்தைப  பற்றிய  குறிப்புகளையும்  கண்ட  கண்கவர்  காட்சிகளையும்
எடுத்த  புகைப்  படங்களையும் , இன்று முதல்  நாடு  வாரியாக  தொடர்ந்து
வெளியிடுகிறேன்

       அதற்கு  முன்னதாக  நான்  பாரிஸ்  நகரில்  தங்கியிருந்த போது
அங்கேயே  தங்கி வாழ்ந்து கொண்டு  தன்னோடு  நகரில் (பாரிஸ்)
தங்கி வாழும் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்  குடும்பங்களையும்  இணைத்து
கம்பன் கழகம் என்ற அமைப்பை  உருவாக்கி மிகமிகச்  சிறப்பாக  நடத்தி வரும் வெண்பா வேந்தரும் அயல் நாட்டில் தமிழை வளர்க்கும் அன்பருமாகிய  கவிஞர்  கி  பாரதிதாசன்  அவர்கள் நேரில் என்னை வந்து  சந்தித்தை  நான்  என் வாழ்நாளில் பெற்ற மறக்க  இயலாத பயன் என்றே
கருதுகிறேன்.

       நகருக்குப்  புறத்தே   சுமார் ஐம்பது  மைல்களுக்கு  அப்பால்  எங்கள்
குழு தங்கியிந்த  விடுதி  இருந்ததால்  பாரிஸ் நகரின்  வரைப் படத்தில்  அது வரவில்லை அதனால்  வரும்  வழி  கண்டு பிடிக்க முடியாமல் இரவு
ஒன்பது  முதல்  பல்வேறு  வகையில் அலைந்து  இரவு பன்னிரண்டு  மணி
அளவில் அறைக்கு வந்தார். அவரோடு கம்பன்  கழக உறுப்பினர் மூவரும்
வந்து சிறப்பித்தனர்.

      வந்த அனைவரும்  எனக்கும் என்னோடு அறையில் தங்கியிருந்த  அகில  பாரத மூத்தகுடிமக்கள் சங்கத்தலைவரும்  பயணக் குழுவின் அமைப் பாளருமாகி  திருமிகு அ சாமிநாதன் அவர்களுக்கும்  தங்கள் கம்பன்  கழத்தின்  சார்பாக  பொன்னாடை  போர்த்தி  பரிசுப்  பொருளும் வழங்கி
கம்பன் கழகம்  நடத்திய விழா மலரையும் தந்தார்கள்

      மேலும் கிட்டதட்ட  ஒரு மணி  நேரம்  உரையாடி  மகிழ்ந்தோம்
அதுமட்டுமல்ல, நாங்கள்  ஐம்பதுபேர்  குழுவாக வருது முன் கூட்டியே
தெரிந்திருந்தால் எங்கள்  பாரிஸ் கம்பன் கழகத்தில் உங்கள்  அனைவருக்கும்  சிறந்த வரவேற்பு  கொடுத்திருப்போம் என்று அவர்கள்
கூறிய போது  நாங்கள்  இருவரும் நெகிழ்ந்து போனோம்.

      மறுநாள்  காலை நாங்கள் பாரிஸை விட்டு பெல்ஜியம்  போக
வேண்டி  இருந்ததால் பிரியா விடை பெற்று அவர்கள்  செல்ல வழி
யனுப்பி விட்டு நாங்கள் சற்று .நேரம் கண் துயின்றோம்.

                                        புலவர்  சா  இராமாநுசம்

 புகைப் படங்கள்!