Friday, June 28, 2013

மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும்



மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்
   மாறா எதுவும் இலையாகும்
கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
    கூறும் காரணம் பலவாகும்

தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
   தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே
ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
    அடிக்கடி மாறும் கோலத்தால்

அடைமழை வறட்சி பனியென்றே-இந்த
    அவனியில் காணும் நிலையின்றே
விடைதனை அறியா கேள்விபல-நெஞ்சில்
     வேதனை மூட்டும் கேள்விசில

தடையது வந்தால் மாறுவதும்-பல
    தத்துவ விளக்கம் கூறுவதும்
நடைஉடை கால மாற்றத்தில்-இங்கே
    நாளும் நடப்பது தோற்றத்தில்

ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது

பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
    பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
    நிலையாய் எதனை நாம்கொண்டோம்

எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
   எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
   உணர்ந்தால் வாரா ஒருதொல்லை

தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
   தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
    எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!

                               புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 26, 2013

நனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ் நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்!





மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதை –என்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றே –பலர்
     இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானே –அன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கினீர்  மறுமொழி  தம்மை – என்னை
     வாழ்திட,, வளர்ந்திட, வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ண தாமே –திரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கி–பின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சினில்  தாங்கிக்,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும் –அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன் – மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன் –முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர் – நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றே –எனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர் – வாழ்
        நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!

                   புலவர் சா இராமாநுசம்

Monday, June 24, 2013

எதுக்கவிதை என்றிங்கே ஆய்தல் வீணே –அதை எழுதியதும் எவரெனவே ஆய்தல் வீணே!





இதுவரையில்  என்கவிதை  மரபின் வழியே- நான்
   எழுதியது  அனைத்துமே  அன்னை  மொழியே
புதுக்கவிதை  எழுதிவிட முயன்று  பார்த்தேன்-ஆனால்
   புரியவில்லை! வரவில்லை! உள்ளம்  வேர்த்தேன்!
எதுக்கவிதை  என்பதல்ல  எனது  நோக்கம் –நானும்
    எழுதிடவே எண்ணினேன் புதிய ஆக்கம்!
அதுவெனக்கு வரவில்லை! தோற்றுப்  போனேன்-ஆனால்
    ஆசைமட்டும் அடங்காத  ஒருவன்   ஆனேன்


இன்றில்லை! என்றாலும், வெற்றி பெறுவேன்! –மேலும்
    இயன்றவரை  முயன்றேதான் எழுதித்  தருவேன்
நன்றில்லை எனச்சொல்லி தள்ள மாட்டீர் –என்ற
    நம்பிக்கை  எனக்குண்டே எள்ள மாட்டீர்
கன்றில்லை என்றாலும் பசுவின் பாலை –யாரும்
    கறக்காமல்  விடுவாரா! ? பயணச்  சாலை
ஒன்றில்லை  என்றாலும்  முயலல்  தானே –பணியில்
    ஓய்வுற்ற எனவரையில் அறிவேன்  நானே !


புதுக்கவிதை எழுதுவதும்  புதுமை  என்றே –எனக்குப்
    புலப்படவும், புரிந்திடவும் உணர்ந்தேன்  நன்றே
இதுக்கவிதை எனச்சொல்ல எழுத  வேண்டும் –மேலும்
   எழுதிவிட  நாள்தோறும் நம்மைத் தூண்டும்
மதுக்கவிதை! படிப்போரின்  மனதை  மயக்கும் –என்றும்
    மறவாது !நினைத்தாலே  நெஞ்சம்  வியக்கும்
எதுக்கவிதை  என்றிங்கே   ஆய்தல்  வீணே –அதை
    எழுதியதும்  எவரெனவே  ஆய்தல் வீணே!

                 புலவர் சா இராமாநுசம்