மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்
மாறா எதுவும் இலையாகும்
கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
கூறும் காரணம் பலவாகும்
தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே
ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
அடிக்கடி மாறும் கோலத்தால்
அடைமழை வறட்சி பனியென்றே-இந்த
அவனியில் காணும் நிலையின்றே
விடைதனை அறியா கேள்விபல-நெஞ்சில்
வேதனை மூட்டும் கேள்விசில
தடையது வந்தால் மாறுவதும்-பல
தத்துவ விளக்கம் கூறுவதும்
நடைஉடை கால மாற்றத்தில்-இங்கே
நாளும் நடப்பது தோற்றத்தில்
ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
ஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
சண்டை மூண்டிட இப்போது
பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
நிலையாய் எதனை நாம்கொண்டோம்
எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
உணர்ந்தால் வாரா ஒருதொல்லை
தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!
புலவர் சா இராமாநுசம்