ஆறிடும்
மேடு பள்ளம் –என
ஆகுமே அழியும் செல்வம்!
மாறிடும் நம்முடை வாழ்வில்-இதை
மறவாது நடப்பின் தாழ்வில்!
ஏறிடும் போதும் செம்மை –நம்
இயல்பென வாழின், நம்மை
கூறிடும்
உலகம் போற்றி –நல்
குணவானாய் நாளும் சாற்றி!
வருவாயோ ஏதும் இல்லை –என
வாழ்கின்ற போதும், தொல்லை,
தருமாறு சூழல் வரினும் –கலங்கி
தடுமாறும் நிலையே தரினும்!
ஒருநாளும் தன்னிலை தாழா –மிக்க
உறுதியே நெஞ்சில் வீழா
வருவாரே இங்கே இன்றும்-நிலைத்து
வாழ்வாராம் அறிவீர் என்றும்!
இம்மையில் வறுமை கொடிதே-அதுவும்
இளமையில் மிகவும் கொடிதே!
அம்மையாம் ஔவை கூற்றே-அதை
அனைவரும் மனதில் ஏற்றே!
நம்மையே திருத்திக் கொள்வோம்-வாழ்வை
நடத்திடின் என்றும் வெல்வோம்!
செம்மையுள் செம்மை ஆமே –வறுமை
சிந்தனை செய்வீர் தாமே!
புலவர் சா இராமாநுசம்