Friday, May 24, 2013

பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின் பூமியில் புகழச் சொல்லேது!



காலம் ஓடும் நிற்காதே-வீண்
  காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
   நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
  அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
   கொள்கை அழகு! பேசலுக்கு

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
   தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
   பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
    கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
   எண்ணா செயல்தரும் துயரன்றோ

மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
   மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
   சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
   குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
   சிந்தனை தன்னில் ஆழ்வோமே

வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
   வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
    சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
   உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
   பூமியில் புகழச் சொல்லேது!

                   புலவர் சா இராமாநுசம்


Wednesday, May 22, 2013

உணர்வை அணுவேனும் கொண்டாயா?

கரைந்தே உண்டிடும்
காக்கையைப் போலவே
விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த
விவேகம் தனையேனும் எய்தாயா?

தன்னினம் காத்திட
தன்குரல் எழுப்புமே
உன்னினம் காத்திடச் செய்தாயா-பறவை
உணர்வை அணுவேனும் எய்தாயா?

கூட்டுள குஞ்சுக்கும்
கொத்திடும் அலகாலே
ஊட்டிடும் அன்பினைக் கற்றாயா-பறவை
உணர்வை அணுவேனும் பெற்றாயா?

கன்றதைக் காணாது
கத்திடும் தாய்பசு
ஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

வளர்த்திடும் நாய்கூட
வாலாட்டி நன்றியாம்
உளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

தட்டினால் மாடுகள்
தானாகப் பாதையில்
ஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

           புலவர் சா இராமாநுசம்

Monday, May 20, 2013

ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம் அறிந்து நடப்பின் இல்லைபழி



முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி