தாங்கிட
இயலா கொடுமையிதே –காற்றும்
தகித்திட முடியா அனலேயிதே!
தூங்கிட ஏதும் வழியில்லை-இரவும்
தொடர்ந்து வேர்வை தரும்தொல்லை!
ஓங்கிட நாளும் என்செய்வோம் –எப்படி
உறக்க மின்றியே நாமுய்வோம்!
நீங்கிட வேண்டும் இந்நிலையே –உடன்
நிம்மதி அதுவரை நமக்கிலையே!
வீதியில் நடப்பவர் பரிதாபம் –படும்
வேதனைத் தருமே கடுங்கோபம்!
பீதியால் நிழலைத் தேடுகின்றார் –காணின்
பிழைத்திட அங்கே ஓடுகின்றார்!
காதில் புகுவதும் வெங்காற்றே-உச்சிக்
கதிரவன வெம்மையால் உடன்மாற்றே!
நீதியில்
செயலிதாம் மாற்றிடவாய்
நிம்மதி பெற்றிட ஆற்றிடுவாய்!
ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறே –அனலை
அள்ளித் தந்தால் எவ்வாறே!?
ஈண்டே நாங்கள் வாழ்ந்திடவா –இல்லை
இன்னல் பட்டே மாயந்திடவா!
பூண்டும்
கருகிப் போனதுவே –எரியும்
புகையில் நெருப்பென ஆனதுவே!
வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ்
வேதனை தாங்காயிம் முதியோனே!
புலவர் சா
இராமாநுசம்