Friday, May 3, 2013

இதயம் கனிந்த நல்லோரே—என் இதயத்தில் வாழும் பல்லோரே!



இதயம் கனிந்த நல்லோரே—என்
   இதயத்தில் வாழும் பல்லோரே!
நிதமும்  எழுத  நினைக்கின்றேன்-முதுமை
     இயலா  நிலையால் தவிக்கின்றேன்

இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
   இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
   தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!

சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
   சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை  தவழட்டும்!-மக்கள்
   நிம்மதி யாக வாழட்டும்!

பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
   பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
   கேவல மான இதனாலே!

உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
   ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
   ஏதும் அறியாக் கோழைகளே!

ஊரில் இல்லை வரும்வாரம்-எனவே
   உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
   வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!

                         புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 1, 2013

எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய் இணைந்திடச் செய்தாய் மேதினமே!.



சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனைச்
சுரண்டி உண்பவன் முதலாளி!
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடன் வாழ்பவன் முதலாளி!
திரண்டிட அணியெனத் தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி!
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே!
தருக பல்வகைத் தொழிலோங்க - ஏதும்
தடையின்றிப் பற்றாக் குறைநீங்க!
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி,
பேதத்தை நீக்கும் நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே!

செய்யும் தொழிலே தெய்வமென - முன்னோர்
செப்பிய வழியேச் செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே!

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்துப்
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே!
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே!
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்குக் காரணம் இத்தினமே!

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடத் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

                                        புலவர்   சா.இராமாநுசம் 

Monday, April 29, 2013

உற்றவன் நீதான் என்றால் உடனடி விரைந்து வாவா!



இனிய அன்பர்களே!
      சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு
      அவ்வகையில் வந்த கவிதை இது!
                 ஊரில், என் நண்பன்! என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு
      இரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே
      அழுது புலம்பியது. நண்பரோடு தங்கியிருந்த அவனை,சென்னை வந்து
       யார் அழைத்தும் வர மறுத்து விட்டான்
                நான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்
       அடுத்த நாளே வந்து விட்டான்!
            
             அன்னையின் கண்ணீர் இங்கே
                 ஆறெனப் பெருகி ஓட
             சென்னையும் சென்றாய் அங்கே
                 சென்றுநீ என்னக் கண்டாய்
             உன்னுரு காட்டும் நிழலை
                  ஒழித்திட முயலல் மடமை
             என்னுயிர் நண்பா இதனை
                   எண்ணிட மறந்தாய் ஏனோ
             
             இடமிலை என்று நீயும்
                   இவ்வூரினைப் பிரிந்து செல்ல
               திடமிகு உமதுத் தந்தை
                   தீதென்ன செய்தேன் என்றே
              உடலுமே குலுங்க குலுங்க
                  உள்ளமே நொந்து அழுதார்
               மடமையாம் நண்ப இந்த
                   மனநிலை பெற்றாய் ஏனோ
              
             பெ ற்றவர் சுற்றம் நீங்கி
                  பிரிதொரு ஊரும் செல்ல
               பற்றுமே அற்றார் போல
                  பறந்தனை இரவில் நன்றோ`
               கற்றவர் செய்யும் செயலா
                  கண்ணீரோ வெள்ளம் புயலா
                உற்றவன் நீதான் என்றால்
                   உடனடி விரைந்து வாவா!

                                புலவர் சா இராமாநுசம்