இதயம் கனிந்த நல்லோரே—என்
இதயத்தில் வாழும் பல்லோரே!
நிதமும் எழுத நினைக்கின்றேன்-முதுமை
இயலா நிலையால் தவிக்கின்றேன்
இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!
சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை தவழட்டும்!-மக்கள்
நிம்மதி யாக வாழட்டும்!
பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
கேவல மான இதனாலே!
உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
ஏதும் அறியாக் கோழைகளே!
ஊரில் இல்லை வரும்வாரம்-எனவே
உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!
புலவர் சா இராமாநுசம்