Friday, April 19, 2013

பொம்மை அம்மா பொம்மை – மழலை பேசும் நல்ல பொம்மை




பொம்மை அம்மா  பொம்மை –மழலை
   பேசும்  நல்ல பொம்மை!
அம்மை அம்மா அம்மை – அவள்
    அழகு  நடையும்  செம்மை!

நடக்கும்  போதே  விழுவாள் –நம்மை
      பார்தா மட்டுமே  அழுவாள்!
துடுக்கு  தனமே மிக்காள் –யாரும்
    தூக்கிக்  கொஞ்சத்  தக்காள்!

காது கண்ணு  கேட்டா –தனது
    கையால்  தொட்டுக்  காட்ட,
சேதி மட்டும்  புரியும்! –அதைச்
   செய்து காட்ட  தெரியும்!

கோபம்  கூட வருமே –பெரும்
   குரலில்  அழுகை  தருமே!
பாப  மென்று சென்றே –தூக்க
  பதறித்  திமிரும்  நன்றே!

இங்கும் அங்கும்  ஓடும்-எதையும்
   இழுத்து  கலைத்து  போடும்!
தங்கு  தடையோ இல்லை –அம்மா
   தடுத்தால்  மேலும்  தொல்லை!

குருவி  காக்கா காட்டி –தினம்
   கொடுக்கும்  உணவை  ஊட்டி!
அரிய  செயலாய் தாயும்–அதனை
    அளிக்க திறக்கும்  வாயும்!

அண்ணன்  வரவும்  கண்டே –மிக
    அளவில் மகிழ்வு கொண்டே!
கண்கள்  விரிய ஓடும் –இரு
     கைகள்  பற்றி  ஆடும்!

அப்பப்பா செய்வதவள் குறும்பு! –ஆனா
    அத்தனையும்  இனிக்கின்ற கரும்பு
ஒப்பப்பா சொல்வதற்கு  இயலா! –எங்கள்
     உள்ளத்தில்,நடனமிடும்  மயிலா!

              புலவர்  சா  இராமாநுசம்
  குறிப்பு-
      சென்ற வாரம் என்  குடும்பத்தோடு திருமணவிழாவில்  கலந்து கொள்ள திருச்சி சென்றபோது உடன்  வந்த என் மருமகனின் தம்பி மகள் செய்த குறும்புகளைக் கண்டே எழுதிய கவிதையும் புகைப்படமும்.
 
 

Wednesday, April 17, 2013

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில் ஈடில் ஒன்றென அறியாதான்



சாதலே மிகவும் இன்னாது-என
சாற்றிய வள்ளுவன் மாற்றியதை
ஈதல் இயலா தென்றாலே-அதுவும்
இனிதெனச் சொல்லிப் போற்றியதை
காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
கண்ணிர் தன்னைத் துடைப்பீரா
ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா
இன்பம் காணும் சுகவாழ்வே

பெற்றான் பொருளைக் காப்பாக-அதனைப்
பேணிக் காக்கும் நோக்காக
அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
அறமென செல்வம் சேர்ப்பீரே
உற்றார் இல்லார் உறவில்லை-பசி
உற்றார் எவரோ? கணக்கில்லை
நற்றா யாக ஏற்றிடுவீர்-நாளும்
நற்பணி யாகவே ஆற்றிடுவீர்

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
ஈடில் ஒன்றென அறியாதான்
பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
பதுக்க பாவம்! மண்மூடி
காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
காணா தவன்கண் நீர்வற்ற
சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
சென்றதே இன்று கண்டபலன்

புலம்பி அழுதால் வந்திடுமா-போன,
பொருளும் பாடம் தந்திடுமா?
விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
தனக்கென வாழா உளம்பெற்றே
அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

                            புலவர்  சா  இராமாநுசம்