Saturday, March 9, 2013

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே ஏற்படவும் காரணமா சர்வதேசம்



குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை 
குருடாக செய்ததுவே நமதுதேசம் 
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள 
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம் 
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய 
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே 
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில் 
வரநீரும் காரணமே கையாமதனை 

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே 
ஏற்படவும் காரணமா சர்வதேசம்
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகளமூட-தமிழன்
கல்நெஞ்சம கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

புலவர் சா இராமாநுசம்

Friday, March 8, 2013

மகளிர் தினமும் இன்றாமே மகிழும் நிலையா? அன்றாமே!

மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை

இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்

எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே

மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக்  கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே

அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே

விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

            புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 6, 2013

சொல்லில் இன்றைய மனிதநிலை!

போதுமென்ற மனங் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

உங்கள் ஆதரவை டுவிட்டரிலும் தொடர வேண்டுகிறேன்.

வணக்கம் தோழர்களே.. வலைப்பதிவு,முகநூலைத் தொடர்ந்து டுவிட்டரிலும் எழுத ஆரம்பித்துள்ளேன்.உங்கள் ஆதரவை டுவிட்டரிலும் தொடர வேண்டுகிறேன்.

                                புலவர்  சா  இராமாநுசம்

முகநூலில் நான் எழுதிய இவை தினம் ஒன்று எழுதியது

முகநூலில்  நான்   எழுதிய இவை!   தினம் ஒன்று எழுதியது!

எண்ணை உள்ளவரை இழுத்து எரிந்து ஒளியைத் தரும் திரியானது, எண்ணை வற்றியதும் தன்னையே எரித்து ஒளியைத் தருதல் போல , சான்றோர்கள் தன்னை அழித்துக் கொண்டாவது பிறருக்கு உதவவே முன் வருவார்கள்.

    தவளை தன் வாயாலேயே தன் இருப்பிடத்தைக் காட்டி பாம்புக்கு பலியாவதைப் போல சில மனிதர்களும் தன் வாயாலேயே கெட்டழிந்து போவார்கள்



அகத்தில் தோன்றுவதை நினைத்தபடி, நினைத்த நேரம் முகநூலில் எழுதுவது எளிதாக இருக்கலாம். ஆனால் கத்தியின் கூர்மையைவிட பேனாவின் கூர்மை வலிமையானது என்பதை உணர்ந்து நாம் எழத வேண்டும்.


கட்டிய ஆடை நழுவும் போது கை தானாகச் சென்று உதவுதல் போல உற்ற நண்பன் துயர் படும்போது அவன் கேட்காமலேயே நாம் வலிய சென்று உதவுதலே உண்மையான நட்பு! ---- வள்ளுவர்

                                  புலவர்  சா இராமாநுசம்
      

     

நித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட சித்தம் இருந்தாலும் செயல்படுத்த இயலவில்லை!




நித்தம் ஒருகவிதை  நிலையாக  எழுதிவிட
சித்தம்  இருந்தாலும்  செயல்படுத்த  இயலவில்லை!
முதுமை  முன்னாட   முதுகுவலி பின்வாட
பதுமை  ஆகிவிட்டேன்  பதிவெழுதா  நிலைபட்டேன்!

மோனை  எதுகையென  முறையாக  எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்று  போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு  யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கை போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!

படிப்பவரும்  குறைந்துவிட்டார் பலபேரைக்  காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும்   காணவில்லை!
உடலுக்கே  சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே ஆலைபோல  கவலையிலே  மனமோயா!

மாற்றுவழி  தேடினேன் முகநூலால்  தேற்றினேன்
சாற்றினேன் அதன்வழியே ஆற்றியது ஓரளவும்!
உம்மை மறபேனா ?  ஓடிவந்தேன் இங்கேயும்
எம்மை  மறந்தாரை  யாம்மறக்க  மாட்டோமால்!

சிந்தனையின்  துளிகளெனச்  சிலவரிகள் எழுதினாலும்
வந்தவர்கள்  பலநூறாம் வருகின்றார்  தினந்தோறும்!
விந்தையதில்  என்னவெனில் விரிவாக  சொல்வதெனில்
சந்தையது அப்பப்பா ! சந்தித்தேன் அங்கேதான்!

வலைதன்னில்  காணாத  பலபேரும்   அங்கே
நிலைகொண்டு எழுதியே  பெற்றார்கள்  பங்கே
பிறந்த  இடம்விட்டுப்  போனாலும்  உமையெல்லாம்
மறந்து விடுவேனா  மறுபடியும்  வருவேனே!


                       புலவர்  சா  இராமாநுசம்


Monday, March 4, 2013

சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்! சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!



உண்ணாமல் இருக்கின்றார் ஒருவர் இங்கே
உயிர்நாளும் ஊசலாட காண்பார் எங்கே?
மண்ணாள வந்தோரோ மாற மாட்டார்
மதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டார்!
எண்ணாது எதற்காக விரதம் ஐயா
இருக்கின்றீர் கைவிட வேண்டும் ஐயா!
கண்ணான ஓருயிரும் போகும் முன்னே
கருணைவிழி திறக்காத ? விளைவு என்னே!

கரம்குவித்து வேண்டுகிறோம் முடித்துக் கொள்வீர்
காந்தீய வாதிநீர் ! ஒருநாள் வெல்வீர்!
அறவழியில் போராட்டம் போதும் இதுவே
அண்ணல்வழி கொண்டீர்கள் ஒழியும் மதுவே!
தரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே
தமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே!
சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்!
சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!


                                         புலவர்  சா  இராமாநுசம்