Thursday, January 17, 2013

அணிந்துரை.! கவியாழி கண்ணதாசனின் நூலுக்கு!


                                 அருமை  நண்பர்  கவியாழி கண்ணதாசனின்
அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும்  தருவாயா  என்ற  நூலுக்கு
 நான்  எழுதிய   அணிந்துரை.






புலவர் சா இராமாநுசம்  
புலவர் குரல் வலைப்பதிவு
மதிப்பியல் தலைவர்
தமிழகத் தமிழாரிரியர் கழகம்


              இக்கவிதை  நூலின் ஆசிரியர், என இனிய நண்பர்  கவியாழி கண்ணதாசன் அவர்கள் கவிதைகள் எழுதுவதில் காட்டுகின்ற ஆர்வம்
என்னை மிகவும் வியப்படையச் செய்யும்

          இன்றைய வலையுலகில் ,  மிக மிக குறுகியகாலத்தில், தன்
பெயரிலேயே , ஒரு வலைப்பதிவினைத் தொடங்கி, இவ்வாறு நூல்
வெளியிடும்  அளவிற்கு பல கவிதைகளைப் படைத்த ஆற்றலைக்
கண்டு நான் மெத்தவும் மகிழ்வதோடு பெரிதும் பாராட்டவும் கடமைப்
பட்டுள்ளேன்.

           மரபுக் கவிதைள்  எழுதுவது கடினம் என்ற நிலையில் இன்று
புதுக்கவிதைகள்  எழுதுவோர் எண்ணிக்கையில்  அதிகரித்து விட்டனர்
என்பது மறுக்க இயலாத உண்மை. அவ்வரிசையிலே ஒருவர்தான் நண்பர்
கண்ணதாசன். இவரது  ஆர்வமும், ஆற்றலும் மேலும், மேலும் வளரும்
என்பதிலே எனக்கு ஏதும் ஐயமில்லை

          எனவே அவர் எழுதியுள்ள கவிதைகளில், சில இடங்களில்
உள்ள, சில வரிகளை இங்கே, சுட்டிக் காட்ட  விரும்புகிறேன்.

        சாதி(தீ) என்ற கவிதையில் அவர் சாதி மத பேதங்களை
மிகவும் சாடியதோடு

        மனிதத்தைப் போற்றினால்
        மதமென்ன தடையாசொல்லும்  
என்று கேட்கும் கேள்வி அனைவரும்    சிந்திக்கத் தக்கது

        தமிழை மணந்து  என்ற  தலைப்பில அவர் எழுதியுள்ள
கவிதையில் காணப்படும் அவரது தன்னடக்கப் பண்பும், தன் கவிதைகளைப்
படித்து, மறுமொழி இடும் வலையுலக உறவுகள்பால் அவர் கொண்டுள்ள
பற்றும் பாசமும் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

        சமுதாய தொண்டு என்ற நோக்கோடு பல கவிதைகள்  எழுதியுள்ளார்
அவற்றில் குறிப்பிட தக்கன....
      
        உடல் தானம் செய்வீர், கல்வி (காசுபார்போரின்)கடவுள், ஆயுத பூசை
மகிழ்ச்சியா நிகழ்ச்சியா, போன்ற கவிதைகளைப் படித்து சுவைக்கலாம்
         மேலும், காதல் சுவை சொட்ட  இவர் எழுதியுள்ள கவிதைகள், நூலில் பலவற்றை  நீங்கள் படித்து  மகிழலாம் 

        சுருக்கமாகச் சொன்னால்,  இவர் தன்னுடைய பெயரைக் கண்ணதாசன் என்பதை விட கவிதை தாசன்  என்று வைத்துக் கொண்டால்
கூட  பொருத்தமானதே என்பது என்கருத்து
       
       முடிவாக இவரது ஆற்றல் வளரவும்  ஆர்வம் பெருகவும்  எல்லாம்
வல்ல வேங்கடவனை வணங்கி வாழ்க என வாழ்த்துகிறேன்
                                                              புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 15, 2013

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!




மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்
              

Monday, January 14, 2013

புத்தாண்டே நீவந்து பிறந்து விட்டாய் –பொங்கும் பொங்கலெனும் தைமகளாய் இல்லம் தொட்டாய்




புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய் பொங்கும்
      பொங்கலெனும்  தைமகளாய்  இல்லம்  தொட்டாய்!


வாழ்த்தியுனை   வரவேற்க  மனமே   இல்லை இன்றே
        வரலாறு   காணாத  வறட்சி   தொல்லை!
ஆழ்தியெமை  சென்றதாம்  சென்ற  ஆண்டே இங்கே
       ஆடுமாடும்    மேய்வதற்கா ? பயிரும்  ஈண்டே!

       புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!


பாலுண்டே   பழமுண்டே  பொங்கல்  வைக்க புதிய
    பச்சரிசி   உண்டா   பொங்கல்  வைக்க!
நாளுண்டு  வாழ்வதற்கு  உண்டா  உணவும் வரும்
     நாள்தோறும் காண்போமே  துயரக்  கனவும்!

        புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

மூலையிலே  தொழிலாளி  முடங்கி  விட்டான் நாள்
     முழுவதுமே  வேலையின்றி  துயரப்  பட்டான்!
ஆலையெலாம்  ஓடாது  புழுதி  படிய மக்கள்
      அனைவருமே  ஓயாது  அழுது  மடிய!

     புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

சாலையோரம்  வாழ்பவனைப்  பார்க்கும்  போதும்-அவன்
      சாக்குப்பை  பாய்தண்ணில்  படுக்கும்  தீதும்!
மாலைமுதல்  காலைவரை  பனியில்  நடுங்க காண்போர்
       மனமெல்லாம்  ஐயகோ!  துயரில்  ஒடுங்க!

     புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

தைபிறந்தால்  வழிபிறக்கும்  முன்னோர்  கூற்றே அதை
       தைமகளே  இனியேனும்  நீயும்   ஏற்றே!
கைகொடுத்து  காப்பாற்ற   வேண்டும்    தாயே-செய்யின்
      கரம்கூப்பி  தொழுவோமே  தெய்வம்  நீயே!

   புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

வற்றாது  காவிரிநீர்  வருதல்  வேண்டும் மேலும்
       வான்மழையும்   பருவத்தே  தருதல்   வேண்டும்!
கற்றார்க்கும்  ஏற்றபணி  கிடைக்க  வேண்டும் நாளும்
       கல்லாமைப்  படிப்படியாய் அகல வேண்டும்!

    புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

மின்வெட்டு  முற்றிலுமே  நீங்கச்  செய்வாய் ஏழை
      முகம்மலர  பசியின்றி   வாழச் செய்வாய்!
புண்பட்டுப்  போனோமே  சென்ற  ஆண்டே நல்ல
     புகழ்பெற்றுப்   போவாயா  ?  இந்த  ஆண்டே!

     புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

  உங்கள்  அனைவருக்கும்  என் அன்பான இனிய  புத்தாண்டு
பொங்கல் நல்  வாழ்த்துக்கள்!

                                  புலவர்  சா  இராமாநுசம்