Friday, January 11, 2013

முக்கிய அறிவிப்பு ! வேண்டுகோள் !




     இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கி  உள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கொள்ள விரும்புவோர் தொடரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்    


                   பலநாளாய்  முகநூல்  தொடங்குமாறு   பல  நண்பர்கள் வற்புறுத்தியும்  எனக்கு அதில் விருப்பமில்லாக்  காரணத்தால்  தொடங்காமல்  இருந்தேன்.  ஆனால் தொடர்ந்து  அவர்கள்          வற்புறுத்தி வந்ததால் , நானும் தொடங்கியுள்ளேன்

          இனி, என்னுடைய  படைப்புகள்  முகநூலிலும்  வெளிவரும்  என்பதை  அன்போடு     தெரிவித்துக் கொள்கிறேன்.   வலைத்கண்  வரும்  உறவுகளைப் போலவே முகநூல் உறவுகளும் அதனை  படித்து  தங்கள்  கருத்துக்களை    வெளியிட, வேண்டி  விரும்பி  கேட்டுக்   கொள்கிறேன்

  
                 முகநூல்  முகவரி---


                                                        புலவர் குரல் இராமாநுசம்,

                                                                                நன்றி!

                                          புலவர் சா  இராமாநுசம்,

Wednesday, January 9, 2013

வேண்டியதும், வேண்டாததும்




முடிந்தவரைப்  பிறருக்கு  உதவ  வேண்டும் அவை
     முடியவில்லை  என்றாலும்  தளர  வேண்டாம்
விடிவுவரும் வரைநமக்கு  பொறுமை  வேண்டும் இரவு
     விடியாமல்  போவதுண்டா  கலங்க வேண்டாம்
கடிதுவரும்  என்றெண்ணி  இருத்தல்  வேண்டும் சற்று
      காலமது  ஆனாலும்  கவலை    வேண்டாம்
கொடிதுயெனில்  எதையுமே  தவிர்த்தல்   வேண்டும் சிறு
     குற்றமெனில்  அதைப்பெரிதுப்  படுத்தல்  வேண்டாம்

எண்ணியெண்ணி  எச்செயலும்   செய்தல்  வேண்டும் நாம்
     எண்ணியபின்  தொடங்கியதை  விடுதல்   வேண்டாம்
கண்ணியமாய்  என்றுமே  வாழ்தல்  வேண்டும் வரும்
      களங்கமெனில்  அப்பணியைச்  செய்தல் வேண்டாம்
புண்ணியவான்  என்றும்மைப்  போற்ற  வேண்டும் பிறர்
     புண்படவே  சொல்லெதுவும்  புகல  வேண்டாம்
மண்ணுலகில்  அனைவரையும்  மதித்தல்  வேண்டும் குணம்
    மாறுபட்டார்  தம்முடைய  தொடர்பே   வேண்டாம்

சட்டத்தை  மதித்தேதான்  நடத்தல்  வேண்டும் பெரும்
      சந்தர்ப  வாதியாக  நடத்தல்  வேண்டாம்
திட்டமிட்டே  செலவுதனை  செய்தல்  வேண்டும் ஏதும்
     தேவையின்றி  பொருள்தன்னை  வாங்கல்  வேண்டாம்
இட்டமுடன்  ஏற்றபணி  ஆற்ற  வேண்டும் மனம்
     இல்லையெனில்  மேலுமதைத்   தொடர  வேண்டாம்
கட்டம்வரும்  வாழ்கையிலே  தாங்க  வேண்டும் உரிய
       கடமைகளை   ஆற்றுதற்கு   தயங்க  வேண்டாம்

முன்னோரின்   மூதுரையை  ஏற்க  வேண்டும் வாழும்
     முறைதவறி  வாழ்வோரின்  தொடர்பே  வேண்டாம்
பின்னோரும்  வாழும்வழி  செய்தல்  வேண்டும் பழியைப்
      பிறர்மீது  திணிக்கின்ற  மனமே  வேண்டாம்
இன்னாரும்  இனியாராய்க் கருதல்  வேண்டும் பெருள்
     இல்லாரை  எளியராய்  எள்ளல்  வேண்டாம்
தன்னார்வத்  தொண்டரெனும்  பணிவு  வேண்டும் எதிலும்
      தன்னலமே  பெரிதென்று  எண்ணல்  வேண்டாம்

                                புலவர் சா  இராமாநுசம்

இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கியுள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கொள்ள விரும்புவோர் தொடரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்    

Monday, January 7, 2013

அணிந்துரையும், வாழ்த்துப் பாமாலையும்


அன்பர்  சத்திரியனின்  கண்கொத்திப் பறவை, நூலுக்கு  நான் எழுதியுள்ள

                           அணிந்துரையும், வாழ்த்துப் பாமாலையும்


                            அணிந்துரை
   --------------------------------

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல் வலைப்பதிவு
மதிப்பியல் தலைவர்
தமிழகத் தமிழாரிரியர் கழகம்


           இக் கவிதை நூலின் ஆசிரியரும்  என் இளவலுமான
சத்திரியன் அவர்கள் நான் விரும்பும் கவிஞர்களில் குறிப்பிடத்
தக்க முக்கியமான ஒருவர் என்று சொன்னால், அது மிகையல்ல!

    இன்று வலையுலகில் புதுக்கவிதை எழுதுவோர் எண்ணிக்கைதான்
அதிகம்.  என்னைப் போல் மரபுக்கவிதை எழுதுபவர் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில்தான் உள்ளனர் என்பதே உண்மை! மேலும்
நல்ல மரபுக்கவிதை எழுதும் சிலர் கூட ப் புதுக்கவிதை எழுத முனையும்
அளவிற்கு புதுக் கவிதையின் தாக்கம் வளர்துள்ளது என்றே சொல்லலாம்
வலையுலகத்தில்.

    இந்நூலில் வந்துள்ள கவிதைகள் அனைத்தும் தம்பி சத்திரியன் அவர்களின் மனவிழி என்ற வலைப்பதிவில் வெளிவந்தனவே ஆகும் அதில்
நான் அவ்வப்போது என்கருத்துக்களை எழுதியும் வந்திருக்கிறேன் என்றாலும் மொத்தமாக நூல் வடிவில் படிக்கும்போதுதான் அவரது பன்முக ஆற்றலை என்னால் காணவும், உணரவும் முடிந்தன. முதலில், இவரொரு
மண்ணின் மைந்தர் என்று சொல்லும் அளவிற்கு தான் பிறந்த ஊர் மீதும்
தாயகமாகிய தமிழகம் மீதும் அன்னை தமிழ் மொழி மீதும் அளவற்ற
பற்றும் பாசமும் நேசமும் கொண்டவர் என்பதை இவரது கவிதைகளைப்
படிப்பவர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்

    இவரது கவிதைகளில் காதல் உண்டு! அதில் பெரும்பாலும் ஏக்கத்தின்
ஏதிரொலியே மிகுதியாக இருக்கும். சமுதாய நோக்கமுண்டு!ஏதேனும்
தவறு காணின்,சிங்கமென(சிங்கையில் வாழ்வதாலோ, என்னவோ) சீறுகின்ற
சொற்களின் தாக்கம் கவிதைகளில் காணப்படும். மூட நம்பிகையை முற்றிலும் வெறுப்பவர். அதுமட்டுமல்ல,தன் வாழ்க்கையில் தன்னம்பிக்கை
மிக்கவராக, ஏன்!ஒரு சாதனையாளராக விளங்க வேண்டு மென்ற ஆர்வம்
உள்ளவராகவும் இவரை நான் காண்கிறேன்.

     இவரது கவிதைகளில் நீண்ட கவிதைகளும் உள்ளன, குறுங்கவிதைகளும் உள்ளன.அதில் என்னை மிகவும் கவர்ந்தவை குறுங்
கவிதைகளே ஆகும்  எடுத்துக் காட்டாக, சிலவற்றை இங்கே குறிப்பிட
விரும்புகிறன்.

      மனைவி என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கவிதை!

             உளி வேண்டாம்
                   ஒரு
             துளி மட்டும்
              உன்னிடம்
              தந்தால் போதும்
            ..................................!!?

 கவிதையின் முடிவை நீங்களே புத்தகத்தில்  படித்துப் பருங்கள்!  எவ்வளவு
சுவையாக, நயத்தக்க நாகரீகமாக எழுதி யுள்ளார் என்பதை உங்களால்
உணரமுடியும்

       இதயம் என்ற தலைப்பில் , அது அமுதசுரபி என்பதும் அதில்,அவள் நினைவுகள் அள்ள அள்ள  குறையாது வரும் என்றும் கூறுகின்ற கற்பனை, அழகோ அழகு!   முரண் என்று ஒரு கவிதை,
        நீ
        வாய்விட்டுச் சிரித்தாய்
        நான்
        நேய்பட்டுப் போனேன்
தலைப்பும் பொருளும் எவ்வளவு பொருத்தம்!  இதுமட்டுமல்ல!ஏனிந்த மயக்கம்,நத்தை,காதல் குழந்தை,புரிந்தால் சரி, உசுரே போகுது, என்று
பல தலைப்புகளில் இவர் எழுதியுள்ள கவிதைகளை நான் விளக்கிச் சொல்வதை விட நீங்களே படித்துப் பாருங்கள்

     பாஞ்சாலி சபதம் என்ற கவிதையில் சமுதாய வளர்சியின் காரணமாக வரும் சீர்கேட்டை, எள்ளலும் நையாண்டியாகவும் சாடியுள்ளார்

           துச்சாதனர் களுக்கு
           வேலையி ல்லை
           கண்ணனோ
           தேவையே இல்லை

           திரௌபதிகள்
           திறந்த மேனியுடனே
           திருவீதி உலா வருகிறார்கள்

     மேலும்,பெண் என்ற தலைப்பில் கடவுளையும் பெண்ணையும் ஒப்பிட்டு
கருவறைக்குள் கடவுள் அடைந்து கிடக்க கருவறையே பெண்ணுக்குள்
அடைந்து கிடக்கிறதே, எனவே கடவுளைவிட பெண்ணே உயர்ந்தவள்
என்று சொல்வது எண்ணி எண்ணி மகிழத் தக்கதல்லவா!

     கண்ணில் தெரியும் தூரத்திலுள்ள  ஈழமண்ணில் எண்ணில்  நம்மினத்
தமிழர் கொல்லப் பட்டபோது இனப்பற்றில்லாது இங்குள்ள தமினத் துரோகிகளைக் கண்டு, வெகுண்டு இவர் பாடிய யுத்தம் செய் என்ற கவிதை
கோபத்தின் வெளிப்பாடாகும் அதில்...

            நமக்கான
            உரிமைகளை ஒன்று
            கேட்டுப் பெற வேண்டும்
            மறுக்கப்படுமாயின்
            உதைத்துப் பெற வேண்டும
     எனக் கூறுவது இவரது ஆவேசத்தின் வெளிப்பாடல்லவா!

        பொருள்வழிப் பிரிவு என்ற இலக்கணத்திற்கு ஏற்ப பணிநிமித்தம
இன்று அயல்நாட்டில் அவர் வாழ்வதால், மனைவி மக்களைப் பிரிந்து
இருக்கின்ற ஏக்கம் சில கவிதைகளில் காணத்தான் செய்கிறது

      இதற்கு மேலும் நான் எடுத்துக் காட்டி விளகுவது தேவையில்லை
என்றே கருதுகிறேன்! சந்தணம் மணக்குமென்று சொல்வதற்குச் சான்று
தேவையா! இவரது கவிதை அரைக்க மணக்கும் சந்தணமே ஐயமில்லை!


      


       இப்படி இவர் எழுதியுள்ள  கவிதைகள் அனைத்தும் வரிகள்
தோறும், வார்த்தைகள் தோறும் உயரியசிந்தனையின் வெளிப்பாடுகளை,
கவிஞர், தாம் உணரந்ததோடு நம்மையும் உணர வைத்துள்ளார்.

     முடிவாக,அன்பின் இனிய உறவுகளே நான் விரும்புவது, அல்ல! அல்ல!
வேண்டுவது, நீங்கள் இந்த நூலை வாங்குவது பெரிதல்ல! அனைத்துக் கவிதைகளையும் தவறாமல் படிக்க வேண்டும் என்பதே ஆகும்


           கருகொண்ட சிந்தனையே! கன்னித் தமிழில்
           உருகொண்டாய்  பாடலென! உலகில்! திருவென்ன
           பல்லோரும் பாராட்ட பண்புமிகு சத்திரிய
           நல்லோரும் தந்தாரே நன்கு

           ஒன்றல்ல மேன்மேலும் உள்ளத்தில் தோன்றுவதை
           இன்றல்ல என்றாலும் தந்திடுவார்-குன்றன்ன
           கொடுத்தாலும் செல்வமே குணம்மாறா சத்திரியர்
           அடுத்தார்க்கும்  காட்டுவதே அன்பு

           வாரி வழங்குவதே வான்வந்து சூழ்கின்ற
           மாரி செயலென்றே மாண்புடையார -கூறியபோல்
           சீர்மிகவே பாநாளும் செந்தமிழில் சத்திரியர்
           பேர்மிகவே தந்திடுவார் பார்!

    முடிவாக, நான் இவரைப் இவ்வாறு பாராட்டி வாழ்த்துவதோடு,மேலும்
நலமுடனும், வளமுடனும் என்றென்றும் வாழ்க என நான் வணங்கும்
வேங்கடவனை வேண்டி முடிக்கின்றேன்    
            
                                                புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...