Wednesday, July 31, 2013

வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு பாடலை முடித்தேன் படித்திட நன்றி



எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் எதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே
செப்பிட இதுதான என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி

புலவர் சா இராமாநுசம்

5 comments:

  1. அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகாய் ஊரை விவரித்தமையும் அதன் இன்றைய மாறுதல் குறித்த ஆதங்கமும் புரிகிறது! சிறப்பான படைப்பு! நன்றி ஐயா!

    ReplyDelete
  3. மீள் பதிவு என்று நினைக்கின்றேன். மீண்டும் மீண்டும் படித்தாலும் ஒவ்வொருநாளும் ஒரு கருத்தூறும் கவிதை வரிகள்.

    ReplyDelete
  4. திண்டிவனம் அருகில் உள்ள சிற்றூர் இயற்கை எழில்கொண்ட நல்லூர்.எங்கள் இதயக் கமலம் அய்யா பிறந்த ஊராயிற்றே

    ReplyDelete
  5. தங்கள் ஊரின் அன்றைய சிறப்பையும் இன்றைய மாற்றத்தையும் இனிதே பகிர்ந்தீர். காலமாற்றத்தால் நாம் விளையாடிக் களித்த திடல்களும் தோப்புகளும், தோட்டங்களும், வயல்களும் கான்கிரீட் காடுகளாய் மாறிவருவது கொடுமை. அந்த மனத்தாங்கலை ஏந்திய தங்கள் கவிதை மனம் கனக்கச் செய்கிறது.

    ReplyDelete