Tuesday, July 23, 2013

மறவழி வாழ்ந்தார் முன்னோரே –அதை மறந்து தாழ்ந்தார் பின்னோரே !


இல்லற வாழ்கை இன்றாமே!-வெறும்
இய.ந்திரம் என்றால் நன்றாமே
அல்லல் நாளும் படுகின்றோம் -மேலும்
ஆசைகள் வளர்ந்திட கெடுகின்றோம்
நல்லவர் எங்கே ? காணவில்லை -மனதில்
நாணமோ ! அச்சமோ! பூணவில்லை
வல்லவர் என்பவர் பொய்சூதே – நாக்கில்
வாய்த்தவர் ஆனதும் மிகதீதே

அறவழி நடப்பவர் குறைந்துவிட –வீண்
அகந்தை குணமே நிறைந்துவிட
துறவரப் போலிகள் நாடெங்கும் –கொள்ளை
தொடர்கதை ஆகிட தெருவெங்கும்
புறவழிச் சென்றே பொருள்தேடும் –மனப்
போக்கால் வாழ்வே இருள்மூடும்
மறவழி வாழ்ந்தார் முன்னோரே –அதை
மறந்து தாழ்ந்தார் பின்னோரே

சுயநலம் ஒன்றே குறியாக – பொருள்
சேர்ப்பதே! இன்றும் நெறியாக
நயனில வழிமுறை நாடுகின்றார் -ஆனால்
நல்லவர் வேடம் போடுகின்றார்
அயலகம் தன்னில் பொருள்தேட – பெரும்
அலைகடல் தாண்டிப் பலரோட
பயனில ஆனதே நம்நாடே –எண்ணிப்
பாரா அரசெனில் வரும்கேடே!

புலவர் சா இராமாநுசம்

20 comments:

  1. அயலகம் தன்னில் பொருள்தேட – பெரும்
    அலைகடல் தாண்டிப் பலரோட
    பயனில ஆனதே நம்நாடே –எண்ணிப்
    பாரா அரசெனில் வரும்கேடே

    !சரியாகச் சொன்னீர்கள்
    வேலை வாய்ப்பைப் பெருக்கி
    நமமவரின் உழைப்பு நமக்கே கிடைக்க
    அரசு ஆவன செய்யவேண்டும்
    இல்லையெனில் நிச்சயம் கேடு சூழும்தான்
    ..

    ReplyDelete
  2. அருமையாக சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    இப்போது தமிழ்மணம் வேலை செய்கிறது மகிழ்ச்சி... நன்றி...

    ReplyDelete
  3. சரியாசொன்னீங்கஅய்யா

    ReplyDelete
  4. மரபுக்கவிதை என்றாலே அவை பெண்களைப் பற்றியோ காதலைப் பற்றியோ அல்லது இயற்கையைப் பற்றியோ தான் இருக்குமென்று நினைத்திருந்தேன்.ஆனால் சமகால வாழ்க்கையை மரபுக்கவிதையில் வடிக்கலாம் என்பதனை உங்கள் கவிதைகளை படிக்கும் போது தான் உணர்ந்து கொண்டேன்.அழகான அர்த்தமுள்ள வரிகள் ஐயா

    ReplyDelete
  5. சுயநலம் ஒன்றே குறியாக – பொருள்
    சேர்ப்பதே! இன்றும் நெறியாக
    மறுக்க முடியாத உண்மை

    ReplyDelete
  6. மனிதனுக்கு ஆசைகள் அதிகமானால் அவன் நல்லவனாக வாழ்வது கடினமே இல்லையா அய்யா ? அருமையாக சொன்னீர்கள்....!

    ReplyDelete
  7. அயலகம் தன்னில் பொருள்தேட......


    என்ன செய்வது புலவர் ஐயா.... பலர் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்....

    நல்ல கவிதை.

    ReplyDelete
  8. அருமையாச் சொல்லிட்டீங்க ஐயா

    ReplyDelete