நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ
நினைவுகள்! அதனால் அத்தொல்லை!
மாற்றி மாற்றி வந்தனவே-மேலும்
மனதில் குழப்பம் தந்தனவே!
ஆற்ற முயன்றும் இயலவில்லை-ஏனோ
அறவே சற்றும் துயிலவில்லை
காற்றில் பறக்கும் இலைபோல-வீணே
கட்டிலில் புரண்டேன் அலைபோல!
எத்தனை மனிதர்கள் வந்தார்கள்-என்
எண்ணத்துல் காட்சித் தந்தார்கள்!
பித்தராய்க் கண்டேன் சிலபேரை-தற்
பெருமையே பேசும் சிலபேரை!
சித்தராய்க் கண்டேன் சிலபேரை-நல்
சிந்தனை ஆளர்கள் சிலபேரை!
புத்தராய்க் கண்டேனே சிலபேரை-எதிலும்
பொறுமை இல்லார் சிலபேரை!
எண்ணம் இப்படி சிதறிவிடும்-என்
இதயம் அதனை உதறிவிடும்
வண்ணம் பலவழி முயன்றாலும்-முடிவில்
வந்தது தோல்வியே என்றாலும்
கண்ணை மூடியே கிடந்தேனே-இரவு
காலத்தை அவ்வண் கடந்தேனே!
உண்மை நிலையிது உரைத்தேனே-அந்த
உணர்வினைக் கவிதையில் இறைத்தேனே!
விடிந்தது இருளும் ஓடிவிட-நெஞ்சில்
விளைந்தநல் அனுபவம் பாடிவிட
முடிந்தது வலையில் ஏற்றிவிட-உங்கள்
முன்னே இன்றும் தவழவிட
வடிந்தது வார்த்தையாம் இப்பாலே-நான்
வணங்கும் தாய்த்தமிழ் கவிப்பாலே!
படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்
படித்திட தந்தேன் அலைவானில்!
கவிதைக் கண்டு எங்கள் மனவானில் பரவசம் என்றாலும் உடம்பை நலமுடன் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சில வேலைகளில் உறக்கம் தொலைவது இயல்பு தான் ஐயா. கவலையின்றிப் படுங்கள்.....
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா...
ReplyDelete//படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்
படித்திட தந்தேன் அலைவானில்!//
வரிகள் ஒவ்வொன்றும் அருமை...
நிம்மதியாக உறங்க நான் ஒரு வழி சொல்லட்டுமா?
ReplyDeleteடி.வி.யை மெல்லிதாகப் பேசவிடுங்கள். சாய்வு நற்காலியில் அமருங்கள். (சாயாத நாற்காலியும் பரவாயில்லை). ரிமோட்டைக் கையிலெடுத்து நொடிக்கொரு சேனலாகச் சுழற்றிக்கொண்டேயிருங்கள். வந்த சேனலே மீண்டும் நாலாவது முறை வரும்போது தன்னையறியாமல் உறங்கிவிட்டிருப்பீர்கள். இதை மறுநாள் விடியற்காலை வசவுகள் உங்களுக்குத் தெரிவிக்கும். (பின்தூங்கி முன் எழுவோர் இருந்தால்!). –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. (பின் குறிப்பு: நான் போஸ்டல் காலனியில் தான் வாசம்! ஆகஸ்ட்டில் சந்திப்போமா?)
கவிதை அருமை.
ReplyDeleteநலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.
இன்று முதல் உங்களைப் பின்தொடரும் ஒரு மாணவனின் வணக்கங்கள்..
ReplyDeleteசில சமயங்களில் நீங்கள் தூங்காமல் இருப்பது கூட ஒரு கவிதையை எங்களுக்குத் தந்து விட ஏதுவாய்.....
ReplyDeleteசில சமயங்களில் விழிப்பு வந்துவிட... தூக்கம் மீண்டும் வராமலே... இதோ இப்போதும்! இந்த அதிகாலையில் நான் உங்கள் பதிவுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன் தூக்கம் வராது! :)
கவலையை மறப்போம்.
ReplyDeleteஎத்தனை வருட அனுபவங்கள்... எத்தனை விதமான மனிதர்களின் அறிமுகங்கள்... அத்தனையும் தங்களைக் கவிபாட முண்டியடிக்கின்றனவோ மனத்தினிலே... தூக்கமின்றித் தொடரும் தொல்லையையும் இனிய கவியாக்கிய தங்களுக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஇனிமேல் நல்ல உறக்கம் இருக்கட்டும்
ReplyDelete