Monday, May 20, 2013

ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம் அறிந்து நடப்பின் இல்லைபழி



முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி

28 comments :

  1. தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் | துவள வேண்டாம் அப்படியே | ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி | ஏணியின் படியென தேறிடுவாய்
    -இந்த வரிகள் அருமையான எனர்ஜி டானிக்! பாஸிடிவ் திங்க்கிங்கை என்னுள் விதைத்த உங்கள் கவிதை (வழக்கம் போல்) மிகப் பிரமாதம் ஐயா!

    ReplyDelete
  2. /// ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
    அறிந்து நடப்பின் இல்லைபழி ///

    சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
    மேதினி தன்னில் ஏதுகுறை
    ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
    அறிந்து நடப்பின் இல்லைபழி//அதனால்தான் சோதனைகளையும் எதிர்கொள்ள முடிகிறது.அய்யன் வழியே அய்யா வழியும் நன்று.

    ReplyDelete
  4. பதிவில் பதிந்ததை
    மனதில் பதியவைத்துக் கொண்டேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. வள்ளுவன் காட்டும் வழியில் செல்வதே மாட்சி

    நன்று ஐயா

    ReplyDelete
  6. செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்ந்தால் உயர்வு நிச்சயம் அருமையாக சொன்னீர்கள் ஐயா. வரிக்கு வரி சிறப்பு.

    ReplyDelete
  7. ஐயா... மிகவே அருமையாகச் சொன்னீர்கள். உங்களைப் பார்க்கையில் உங்கள் சொற்களைக் கேட்கையில் எனக்கு என் தந்தையின் எண்ணமே மேலோங்குகிறது.

    எப்பவுமே உங்களைப்போன்றோரின் இத்தகைய மனதிற்கு உரமூட்டும் சொற்கள் வாழ்க்கையில் சோர்வகற்றி பிடிமானத்தை இன்னும் இறுக்கிப்பிடிக்க வைக்கின்றது.

    மிக்க நன்றி ஐயா மிகவும் நல்லதொரு பகிர்விற்கு!


    த ம 8

    ReplyDelete
  8. தலைப்பிற்கேற்ற கவிதை வழமை போல சிறப்பாக அமைந்துள்ளது
    அருமை ! தங்கள் பேத்திக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கின்றேன் ஐயா
    என் வலைதளத்துக்கும் முடிந்தால் வாருங்கள் .

    ReplyDelete
  9. அர்த்தமுள்ள நம்பிக்கையூட்டும் வரிகள்.

    ReplyDelete
  10. வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
    வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
    வழிகாட்டும்
    மனதிற்கு எழுச்சியூட்டும் வரிகள் அய்யா. நன்றி

    ReplyDelete
  11. "பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
    பார்த்து விரும்பத் தக்கோனாய்
    துணிவு ஒன்றே துணையாக ..." - நல்ல சிந்தனைகளை எடுத்துச் சொல்கின்றது கவிதை.

    ReplyDelete
  12. மிக்க நன்றி!

    ReplyDelete
  13. மனம் தள‌ர்ந்து போனவர்களுக்கும் வாழ்க்கைப்பாதையில் முட்கள் கண்டு பேதலித்துப்போனவர்களுக்கும் அருமையான தன்னம்பிக்கை கவிதை இது!!

    ReplyDelete
  14. தெள்ளுதமிழ்ச் சொல்லில் தெளிவாய் அளித்தீர்!நம்
    வள்ளுவனின் வார்த்தை வழி!

    நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  15. செய்யும் தொழிலே தெய்வம் உண்மைதான் அய்யா...!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...