Wednesday, April 10, 2013

கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி குமுறும் எரிமலை ஆவானே


இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
 கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திட பணமது தாம்பாக
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே

                                    புலவர்  சா இராமாநுசம்

23 comments:

  1. மகனையும் மகளையும் பள்ளியில் சேர்க்க என் அலுவலக நண்பர் படும் பாட்டைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. கல்வி வியாபாரமாகிப் போச்சுதே ஐயா! கவி‌த்தமிழ் சொல்வது போல பொங்கி எரிமலை ஆனால்தான் மாற்றம் வரும் என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  2. கல்வி ஒன்றே நம்மை கரைசேர்க்கும் அய்யா.

    ReplyDelete
  3. ஏழைகளுக்கு கல்வி எட்டாக் கனியாகத் தான் உள்ளது... மாற வேண்டும் ஐயா...

    ReplyDelete
  4. ஐயா...
    கல்வியும் வியாபாரமாகிவிட்டது.
    பணம்படைத்தோர், பள்ளிகளை நடத்துவோர் தமது பணத்தையோ, பொருளையோ அவர்களுக்குக் கொடுக்கவேண்டாமே...
    தயவு என்னும் குணத்தைகொடுத்தால் குறைந்திடுமோ...

    நல்ல கவிதை ஐயா.
    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  5. இளமதி சொல்வது உண்மையே. கல்வியும் வியாபாரப் பொருள் போலவே உள்ளது.

    சிந்திக்க வைத்த வரிகள் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. யதார்த்த கல்வி நிலை குறித்து
    வேதனையுடன் வடித்த கவிதை
    அதிக வேதனைப்படுத்தியது
    பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே//
    இப்படியும் நடக்குமா இனிமேலும் நிம்மதி கிடைக்குமா?

    ReplyDelete
  8. கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே - உண்மை

    ReplyDelete
  9. எழுச்சி மிகுந்த வரிகள் புலவர் ஐயா.

    ReplyDelete
  10. \\வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா\\

    வேதனையிலும் ஆதங்கத்திலும் எழுந்த இந்தக் கவிதை வாசிக்கும் ஒவ்வொருவர் மனத்திலும் வேதனை விதைப்பது உண்மை. தாங்கள் சொல்வதுபோல் கோழையாய்க் கிடக்கும் நெஞ்சங்கள் குமுறி எழும் நாளில் மட்டுமே கனவுகள் நனவாவது சாத்தியம்.

    அழகுத்தமிழால் ஏழைமனம் படும் பாட்டை எடுத்தியம்பிய வரிகளுக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  11. கல்வியும் வியாபாரம் ஆகிவிட்ட நிலை தான்.....

    பணமே பிரதானம் என நினைக்கிறார்கள் அனைவருமே.....

    ReplyDelete
  12. அத்தனை வரிகளும் அருமை ஐயா

    ReplyDelete