Wednesday, May 1, 2013

எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய் இணைந்திடச் செய்தாய் மேதினமே!.



சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனைச்
சுரண்டி உண்பவன் முதலாளி!
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடன் வாழ்பவன் முதலாளி!
திரண்டிட அணியெனத் தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி!
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே!
தருக பல்வகைத் தொழிலோங்க - ஏதும்
தடையின்றிப் பற்றாக் குறைநீங்க!
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி,
பேதத்தை நீக்கும் நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே!

செய்யும் தொழிலே தெய்வமென - முன்னோர்
செப்பிய வழியேச் செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே!

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்துப்
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே!
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே!
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்குக் காரணம் இத்தினமே!

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடத் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

                                        புலவர்   சா.இராமாநுசம் 

26 comments:

  1. சிறப்பான வரிகள்... உண்மை வரிகள்...

    என்றும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...

    நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் ஐயா...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    ReplyDelete
  2. எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
    இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

    மே தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மே தின சிறப்புக். கவிதை வெகு வெகு சிறப்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. திரண்டிட அணியெனத் தொழிலாளி - ஓடும்
    திசைதனை அறியா முதலாளி!
    மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
    மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!//
    உங்கள் வழமையான கவிதைகளைப் போல் அருமையான கவிதை

    ReplyDelete
  5. எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
    இணைந்திடச் செய்தாய் மேதினமே!.//
    உண்மைதான் அய்யா

    ReplyDelete
  6. மே தின வாழ்த்துக்கள் அய்யா...

    ReplyDelete
  7. மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!

    மே தின வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  8. புலவர் அய்யா அவர்களுக்கு எனது ” மே தினம்“ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மே தின வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  10. வாழ்த்து கூறும் கவிதை அற்புதம்

    ReplyDelete
  11. அருமையாக சொல்லியிருக்கிறீங்க பெருந்தகையே....

    ஓங்கட்டும் உழைப்பாளர் கரங்கள்....

    ReplyDelete
  12. உழைக்கும் வர்க்கத்தின் பரிதாப நிலையை மிக அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். உழைப்பாளர்களின் பெருமை போற்றும் அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  13. மிக்க நன்றி!

    ReplyDelete
  14. மிக்க நன்றி!

    ReplyDelete
  15. மே தினத்தின் மேன்மையை அழகாக சொல்லி விட்டீர்கள் அய்யா!

    ReplyDelete

  16. வணக்கம்!

    தமிழ்மணம் 11

    உழைக்கின்ற தோழா் உரிமையைப் பேசி
    அழைக்கின்ற மேதினமே ஆடு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete