Friday, April 19, 2013

பொம்மை அம்மா பொம்மை – மழலை பேசும் நல்ல பொம்மை




பொம்மை அம்மா  பொம்மை –மழலை
   பேசும்  நல்ல பொம்மை!
அம்மை அம்மா அம்மை – அவள்
    அழகு  நடையும்  செம்மை!

நடக்கும்  போதே  விழுவாள் –நம்மை
      பார்தா மட்டுமே  அழுவாள்!
துடுக்கு  தனமே மிக்காள் –யாரும்
    தூக்கிக்  கொஞ்சத்  தக்காள்!

காது கண்ணு  கேட்டா –தனது
    கையால்  தொட்டுக்  காட்ட,
சேதி மட்டும்  புரியும்! –அதைச்
   செய்து காட்ட  தெரியும்!

கோபம்  கூட வருமே –பெரும்
   குரலில்  அழுகை  தருமே!
பாப  மென்று சென்றே –தூக்க
  பதறித்  திமிரும்  நன்றே!

இங்கும் அங்கும்  ஓடும்-எதையும்
   இழுத்து  கலைத்து  போடும்!
தங்கு  தடையோ இல்லை –அம்மா
   தடுத்தால்  மேலும்  தொல்லை!

குருவி  காக்கா காட்டி –தினம்
   கொடுக்கும்  உணவை  ஊட்டி!
அரிய  செயலாய் தாயும்–அதனை
    அளிக்க திறக்கும்  வாயும்!

அண்ணன்  வரவும்  கண்டே –மிக
    அளவில் மகிழ்வு கொண்டே!
கண்கள்  விரிய ஓடும் –இரு
     கைகள்  பற்றி  ஆடும்!

அப்பப்பா செய்வதவள் குறும்பு! –ஆனா
    அத்தனையும்  இனிக்கின்ற கரும்பு
ஒப்பப்பா சொல்வதற்கு  இயலா! –எங்கள்
     உள்ளத்தில்,நடனமிடும்  மயிலா!

              புலவர்  சா  இராமாநுசம்
  குறிப்பு-
      சென்ற வாரம் என்  குடும்பத்தோடு திருமணவிழாவில்  கலந்து கொள்ள திருச்சி சென்றபோது உடன்  வந்த என் மருமகனின் தம்பி மகள் செய்த குறும்புகளைக் கண்டே எழுதிய கவிதையும் புகைப்படமும்.
 
 

16 comments:

  1. பேத்திக்காக எழுதிய கவிதை அருமை ஐயா...

    ReplyDelete
    Replies


    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. ரசிக்க வைக்கும் குறும்புகளை வரிகளில் கண்டேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. மழலைகளின் குறும்பு மனதிற்கும் மகிழ்ச்சிதானையா.
    மறுத்திடமுடியாத மகத்தான செல்வங்கள்.
    மகிழ்ந்து திகழ்ந்ததை மட்டற்ற மகிழ்வுடன் படித்த கவிதை அருமை. ரசித்தேன் ஐயா...

    என் வணக்கமும் வாழ்த்துக்களும்!...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. வண்ணமயிலொன்று வார்த்தைக்குள்
    தோகை விரித்தாடும்
    அழகு நயம் கண்டேன்
    அத்தனை வரியிலும் பித்தம் கொண்டேன்
    ஒப்புக்காய்ச் சொல்லவில்லை
    ஒய்யார நடையொன்றை
    படித்ததில் மகிழ்ச்சி... குழந்தைகள் உலகம் மட்டுமே நாம் இன்னும் இன்னுமென வாழ ஆசைப்படுகின்ற உலகம்... நல்லதொரு கவிதை ஜயா :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அப்பப்பா எத்தனை எத்தனை இன்பம் குழந்தைகள் உலகத்தில் நாமும் மறுபடி குழந்தையாக மாட்டோமா என்ற ஏக்கம் வந்து விடுகிறது அவர்களிடம் இருக்கும் போது. . அழகான வரிகளில் அந்த மழலைப்பருவத்தை நினைவு படுத்திப் போனது ஐயா.

    ReplyDelete
  6. குட்டிப்பாப்பாவின் குறும்பையும் கொஞ்சுதமிழில் பாடலாக்கி எங்களையும் ரசிக்கச் செய்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. குழந்தைக்கு என் ஆசிகள்.

    ReplyDelete
  7. உங்கள் கவிதை மூலம் குழந்தையின் குறும்புகளை நாங்களும் ரசிக்க முடிந்தது!

    ReplyDelete
  8. அடிக்கடி வெளியூர் சென்று வாருங்கள்
    அங்கே நிறைய பேத்தியைப் பாருங்கள்
    கிடைத்திடும் கவிதைகள் -எங்களுக்கு
    கொடுத்திடும் மகிழ்ச்சியை நன்றே.

    குழந்தைக் கவிதை அருமை

    ReplyDelete
  9. // அப்பப்பா செய்வதவள் குறும்பு! –ஆனா
    அத்தனையும் இனிக்கின்ற கரும்பு //

    குழந்தை என்றாலே கவிதைதானே! அதிலும் புலவரின் கவிதை என்றாலே, தெள்ளு தமிழ்தானே!

    ReplyDelete
  10. குழந்தைகளின் குறும்பே கரும்புதான். நன்றி அய்யா

    ReplyDelete
  11. பிஞ்சுக் குழந்தையின் குறும்புகளை கொஞ்சு தமிழில் படைத்தளித்தீர் ஐயா!
    நெஞ்சம் கவர்கிறது

    ReplyDelete
  12. குழந்தைகளுக்கு ஏற்றார்ப்போல
    எளிய இயல்பான மாச்சீரால படைக்கப்பட்ட
    கவிதை அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete