Wednesday, April 17, 2013

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில் ஈடில் ஒன்றென அறியாதான்



சாதலே மிகவும் இன்னாது-என
சாற்றிய வள்ளுவன் மாற்றியதை
ஈதல் இயலா தென்றாலே-அதுவும்
இனிதெனச் சொல்லிப் போற்றியதை
காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
கண்ணிர் தன்னைத் துடைப்பீரா
ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா
இன்பம் காணும் சுகவாழ்வே

பெற்றான் பொருளைக் காப்பாக-அதனைப்
பேணிக் காக்கும் நோக்காக
அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
அறமென செல்வம் சேர்ப்பீரே
உற்றார் இல்லார் உறவில்லை-பசி
உற்றார் எவரோ? கணக்கில்லை
நற்றா யாக ஏற்றிடுவீர்-நாளும்
நற்பணி யாகவே ஆற்றிடுவீர்

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
ஈடில் ஒன்றென அறியாதான்
பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
பதுக்க பாவம்! மண்மூடி
காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
காணா தவன்கண் நீர்வற்ற
சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
சென்றதே இன்று கண்டபலன்

புலம்பி அழுதால் வந்திடுமா-போன,
பொருளும் பாடம் தந்திடுமா?
விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
தனக்கென வாழா உளம்பெற்றே
அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

                            புலவர்  சா  இராமாநுசம்


                   

14 comments :

  1. பொருள் கொண்டபேர்கள் மனம் கொண்டதில்லை; தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை என்ற வாத்யாரின் பாடல்வரிகள் நினைவு வருகிறது ஐயா. அன்பை நெஞ்சினில் தேக்கிடில் எதுவும் சாத்தியமே! அருமை!

    ReplyDelete
  2. காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
    கண்ணிர் தன்னைத் துடைப்பீரா//
    இதைச் சொல்லவும் செயல்படுத்தவும் ஆள்ளிலையே

    ReplyDelete
  3. /// விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
    விவேகம்! உணரின் நீர்வெல்வீர் ///

    மிகவும் பிடித்த வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஈதலே இசை பட வாழ்தலுக்கான வழி என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள் ஐயா!

    ReplyDelete
  5. ஈதல் செய்யாமல் காத்துப் பின் பொருளை கள்வரிடம் பறிகொடுத்துப் பிதற்றி ஈற்றில் மாண்டுபோகும் வாழ்க்கை.
    தானும் அனுபவியாது பிறர்க்கும் வழங்காது வைக்கோற்பட்டறை நாயான செயல்...
    அழகாகச் சொன்னீர்கள் ஐயா...

    வணக்கமும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  6. இருக்கும்வரை இயன்றதை இரப்போர்க்கும் இல்லார்க்கும் ஈந்து, இறக்கும்வேளையிலும் இன்புற்ற மனத்தோடு இதமாய் இமை மூடுதலே கொடுப்பினை என்னும் இன்கருத்தைத் தாங்கி வந்த கவிவரிகளுக்கும் அழுத்திச் சொன்ன குறட்பகிர்வுக்கும் நன்றியும் பாராட்டுகளும் ஐயா.

    ReplyDelete




  7. மிக்க நன்றி!

    ReplyDelete



  8. மிக்க நன்றி!

    ReplyDelete

  9. மிக்க நன்றி!

    ReplyDelete
  10. //விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
    விவேகம்! உணரின் நீர்வெல்வீர்//
    இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்?அருமை.

    ReplyDelete
  11. நன்றாகச் சொன்னீர்கள் .

    ReplyDelete
  12. சிறப்பான கவிதை. ரசித்தேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...