Tuesday, April 2, 2013

கீழோ ராயினும் தாழஉரை கேடோ! குறையோ! அல்ல! நிறை!


நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்
     நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
    அறிவில் குழப்பம்  நிறைந்தனவே!
தினைத்துணை  அளவே செய்நன்றி
    தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
    பயனறி உணரும் நல்லோரே!

அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
     அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
     தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
     கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
     வேதனை குறையும் அக்கணமே!

கீழோ ராயினும் தாழஉரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
   விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
   பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
   இணையில் இன்பம் தேக்கிடுவீர்!

மக்கள் தொண்டு ஒன்றேதான்
   மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
   தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
   சொன்னதை செய்தல் அரிதன்றோ!

                  புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. /// சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
    சொன்னதை செய்தல் அரிதன்றோ! ///

    அறிந்து தெரிந்து புரிந்தவர்கள், மற்றவர்களிடம் குறை காண மாட்டார்கள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
    சொன்னதை செய்தல் அரிதன்றோ!....

    ReplyDelete
  3. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு..
    குறள்தான் நினைவுக்கு வருகிறதையா. முதலில் அவர்தம் குறை கூற்றங்களை களையட்டும்...

    நல்ல கருத்தினைக் கவிதையில் பகிர்ந்தீர்கள்.

    என் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
  4. நல்ல கருத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள் ஐயா

    ReplyDelete
  5. இனிமை ஒன்றே மகிழ்வூட்டம் என்ற கருத்தினை பளிச்சென்று மனதில் பதிய வைத்தது உங்களின் கவித்திறம! அருமை ஐயா!

    ReplyDelete
  6. சிறப்பான கருத்துச் சொல்லும் பா. நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...