Wednesday, March 6, 2013

சொல்லில் இன்றைய மனிதநிலை!

போதுமென்ற மனங் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. எதார்த்தம் நிறைந்த கவிதை...

    ReplyDelete
  2. மனித[ன்]ம் மாறிவிட்டது அய்யா.....அருமையாக சொன்னீர்கள்...!

    ReplyDelete
  3. இன்றைய நிலையை
    மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பெருந்தகையே...

    ReplyDelete
  4. கால சுழற்சியில் மனிதம் தேய்ந்துகொண்டிருப்பதை மிக அருமையாக உரைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. vethanaiyaana varikal
    ayyaaa..!

    ReplyDelete
  6. அய்யா இன்றைய வாழ்வியல் யதார்த்தம்

    ReplyDelete
  7. மனதில் பதிகிற வரிகள்! மனிதம் தேய்ந்து கொண்டிருக்கும் இந்நாளினை நினைத்து வருந்திய கவிதை மனதைத் தொட்டது ஐயா!

    ReplyDelete
  8. இன்றைய சூழலை பிரதிபலிக்கும் சிறப்பான படைப்பு! பகிர்வுக்கு நன்றிஐயா!

    ReplyDelete
  9. சரியாகச் சொன்னீர்கள்;இன்றைய மனித நிலை வருத்தப்பட வேண்டியதாகவே இருக்கிறது

    ReplyDelete
  10. உண்மை, யதார்த்தமாய் கவிதையில்..

    ReplyDelete
  11. இன்றைய சூழலை பிரதிபலிக்கும் யதார்த்த கவிதை ஐயா...

    ReplyDelete
  12. கற்றும் அறியா மூடநிலை
    காண்பதே இன்றைய மனிதநிலை!//உண்மைதான் வருத்தப்பட வேண்டியுள்ளது

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...