Friday, March 8, 2013

மகளிர் தினமும் இன்றாமே மகிழும் நிலையா? அன்றாமே!

மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை

இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்

எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே

மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக்  கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே

அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே

விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

            புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. பெண்களை ஒருமைபடுத்தும் உங்களின் உத்தி அருமை அதுபோல் சாதி மறந்து கட்சி ஆரம்பித்து போராட சொல்லுவதும் நன்று.ஆனால் கட்சியில் யாருக்கெல்லாம் உறுப்பினராகலாம் என்பதையும் சொன்னால் நன்றாய் இருக்கும். தலைவரோ தலைவிக்கோ வாழ்க கோஷம் போடவாவது ஆண்கள் அங்கு வேண்டுமே

    ReplyDelete
  2. // விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
    விளைந்தால் மாறும் இக்காட்சி//
    நல்ல ஆலோசனை ஐயா! விரைவில் அதுவும் நடக்கும்.

    ReplyDelete
  3. //வீதியில் இறங்கி நில்லுங்கள்
    வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்//

    நன்றாய் சொன்னீர்கள் ஐயா. மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    மகளின் தின வாழ்த்துக்கள்... (எல்லா நாளும்)

    ReplyDelete
  5. மகளிர் தினத்துக்கு
    அருமையான கவி படைத்தீர்கள் ஐயா...

    ReplyDelete
  6. வழமை போல உங்கள் ஸ்டைலில் மகளீர் தின கவி அழகு

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை! அருமை ஐயா!

    ReplyDelete
  8. ஒத்த கருத்தும் இல்லையே
    உதடு உதிர்ப்பது சொல்லையே

    மக்கள் அவையே கூடுவதும்
    (ஏ)மாற்றக் கருத்தைத் தேடுவதும்
    வெக்கக் கேடாம் சொன்னாலே
    வேதனை வேதனை இந்நாளே

    முற்றிலும் உண்மையைச் சொல்லும் கவிதை
    வரிகள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .இனியேனும்
    நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று வாழ்த்திடுவோம்!

    ReplyDelete
  9. உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு ஒரு சிறப்பு கவிதை! சிறப்பாகவே உள்ளது.!

    ReplyDelete
  10. //வீதியில் இறங்கி நில்லுங்கள்
    வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்//
    அருமையாச் சொல்லிட்டீங்க ஐயா

    ReplyDelete
  11. மகளிர் தினம் முன்னிட்டு கவிதை ....

    சிறப்பான கருத்து....

    ReplyDelete
  12. மகளிர் தின சிறப்புக் கவிதையின் வழியே பெண்களை வீறு கொண்டு எழச் செய்திருக்கிறீர்கள் ஐயா!
    கவிதையை மிகவும் ஊன்றி படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...