Wednesday, March 6, 2013

நித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட சித்தம் இருந்தாலும் செயல்படுத்த இயலவில்லை!




நித்தம் ஒருகவிதை  நிலையாக  எழுதிவிட
சித்தம்  இருந்தாலும்  செயல்படுத்த  இயலவில்லை!
முதுமை  முன்னாட   முதுகுவலி பின்வாட
பதுமை  ஆகிவிட்டேன்  பதிவெழுதா  நிலைபட்டேன்!

மோனை  எதுகையென  முறையாக  எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்று  போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு  யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கை போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!

படிப்பவரும்  குறைந்துவிட்டார் பலபேரைக்  காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும்   காணவில்லை!
உடலுக்கே  சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே ஆலைபோல  கவலையிலே  மனமோயா!

மாற்றுவழி  தேடினேன் முகநூலால்  தேற்றினேன்
சாற்றினேன் அதன்வழியே ஆற்றியது ஓரளவும்!
உம்மை மறபேனா ?  ஓடிவந்தேன் இங்கேயும்
எம்மை  மறந்தாரை  யாம்மறக்க  மாட்டோமால்!

சிந்தனையின்  துளிகளெனச்  சிலவரிகள் எழுதினாலும்
வந்தவர்கள்  பலநூறாம் வருகின்றார்  தினந்தோறும்!
விந்தையதில்  என்னவெனில் விரிவாக  சொல்வதெனில்
சந்தையது அப்பப்பா ! சந்தித்தேன் அங்கேதான்!

வலைதன்னில்  காணாத  பலபேரும்   அங்கே
நிலைகொண்டு எழுதியே  பெற்றார்கள்  பங்கே
பிறந்த  இடம்விட்டுப்  போனாலும்  உமையெல்லாம்
மறந்து விடுவேனா  மறுபடியும்  வருவேனே!


                       புலவர்  சா  இராமாநுசம்


19 comments :

  1. பூரண உடல்நலத்தோடு இருக்க வேண்டும்... முதலில் மனதில் உள்ள தெம்பைப் போலே உடம்பையும் கவனியுங்கள்... பிறகு எழுத வாருங்கள்... காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  2. // மோனை எதுகையென முறையாக எழுதியவன்
    சேனை இழந்தரசாய் செயலற்று போய்விட்டேன்!//

    அருமையான வரிகள் என்றாலும் நீங்கள் செயலற்றுப் போய்விட்டதாக நாங்கள் கருதவில்லை. தினம் எழுதாவிட்டால் என்ன வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எழுதுங்கள் போதும்.

    ReplyDelete
  3. படிப்பவரும் குறைந்துவிட்டார் பலபேரைக் காணவில்லை
    துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை!///

    உண்மைதான் அய்யா.

    ReplyDelete
  4. // படிப்பவரும் குறைந்துவிட்டார் பலபேரைக் காணவில்லை
    துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை! //

    நாங்க இருக்கோம் அய்யா... தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  5. ஐயா தினம் ஒரு கவி இனிக்கத்தான் செய்யும் எங்களுக்கு எனினும் தங்கள் உடல் நிலை பார்த்து எழுதுங்க. காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. உற்றதன் ஊற்றாகி நிர்ப்பதங்கும் பதுமையே
    பற்றுதல் தேடி பகிரவும் பாரமே
    தொற்றுடன் கூடி இசைமீட்டும் வேலியே
    பருவம் அருந்தும் பகலவனாய் பாரீர்....

    ReplyDelete
  7. முகநூலில் கவிதைகளை எல்லாம் ரசிக்க ஆள் இல்லை.
    என்னைப் பொருத்தவரையில் பதிவு எழுதுவதை நாட்குறிப்பு எழுதுவது போல் நினைத்துக் கொள்கிறேன். மனபாரம் கொஞ்சம் இறங்கிப் போகும்.
    அவ்வளவுதான்.
    நன்றி அய்யா

    ReplyDelete
  8. இரண்டு இடங்களிலுமே கவிதைகள் எழுதிட வேண்டும்.....

    உடல் நிலை ஒத்துழைத்தால் சாத்தியமே....

    சில நாட்களாக என்னாலும் அனைவரது பதிவுகளையும் படிக்க இயலவில்லை.... பணிச்சுமை அதிகம்..... பயணமும் தான்...

    ReplyDelete
  9. சிந்தனையின் துளிகளெனச் சிலவரிகள் எழுதினாலும்
    வந்தவர்கள் பலநூறாம் வருகின்றார் தினந்தோறும்!
    விந்தையதில் என்னவெனில் விரிவாக சொல்வதெனில்
    சந்தையது அப்பப்பா ! சந்தித்தேன் அங்கேதான்!

    அப்படிங்களா...?
    ஆனால் மனநிறைவு எங்கே கிடைக்கிறதோ
    அதற்குத் தான் முன்னுரிமை கொடுப்பீர்கள்
    என்று நினைக்கிறேன்.

    தொடருங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  10. வலையில் உலவாதவர்களும் முகநூலில் உலவி வருவது உண்மைதான் ஐயா. பலரது பதிவுகளில் மறுமொழிகள் குறைந்ததற்குக் காரணமும் அதுவே. எதுவாயினும் ஆரம்பித்த வலைத்தளத்தை மறக்காமல் எழுதவேண்டும் என்றுதான் நானும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் இங்கே தொடர்வதினைக் கண்டு அகமகிழ்கிறேன். மிக்க நன்றி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...