Sunday, March 24, 2013

பொற்பனை உயிரை இனியும் போக்காதீர் காலம் கனியும்




கட்டிளம்  காளை  யொருவன்
     கன்னியாம் பெண்ணு  மொருத்தி
விட்டனர்  உயிரை  என்ற
     வேதனை செய்தி  கேட்டே
பட்டது  துயரம் ! பஞ்சில்
      பற்றிய  தீயாய்  நெஞ்சில்
எட்டுமா ? துரோகி  உமக்கே
     ஈழமும்  மலர  எமக்கே!

தற்கொலை  வேண்டா  மிங்கே
     தன்னலம் மிக்கோ  ரிங்கே
அற்பனாம் பக்சே   தனக்கே
      அடிமையாய்  ஆன  கணக்கே
சொற்பநாள் விரைவில்  முடியும்
      சுதந்திர  ஈழம்   விடியும்
பொற்பனை உயிரை  இனியும்
     போக்காதீர்  காலம்  கனியும்

கோழையா? அல்ல!  நாமே
     கொள்கையில்  உறுதி  தாமே!
ஏழைகள் வடித்த கண்ணீர்
       எரிந்திடும்  தீயாய்  ஆமே
பேழையுள்  பாம்பா ! அல்ல
       பிணைத்திட  தாம்பு  மல்ல
தாழையுள்  நாக  மென்றே
      தனியீழம்  பெறுவோம்  நன்றே!

               புலவர்  சா  இராமாநுசம்

12 comments:

  1. பொற்பனை உயிரை இனியும்
    போக்காதீர் காலம் கனியும்//
    உங்களின் ஆசையும் நிறைவேறும்.

    ReplyDelete
  2. அனைவரும் ஆசையும் அது தான் ஐயா... விரைவில் நடக்கட்டும்...

    ReplyDelete
  3. பேழையுள் பாம்பு அல்ல. தாழையுள் நாகம் - எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள். ஒரு போராட்டக் களத்துக்கான இலக்கணத்தை மிக அழகாக சொல்லி விட்டீர்கள் ஐயா .

    ReplyDelete

  4. வணக்கம்!

    தாழைப்போல் நன்மணம் தந்ததமிழை என்னிதயப்
    பேழையில் வைத்தேன் பிணைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies

    1. ஐயா! இப்பாடல் தாங்கள் நினைப்பது போல அறுசீர் விருத்தமல்ல! தனிச்சொல்லின்றி வந்த சிந்துப் பாதான்! சந்தம் மட்டுமே முக்கியமாகக் கருதி நான் எழுதும் பாடல்கள் அனைத்துமே சிந்துப் பாதான்! என்னிடம் வெளிநாட்டோடு தொடர்பு கொள்ளும் தொலைபேசி வசதி இல்லை! தங்கள் ஐயம் சரியானதே! எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி! மேலும், முதுமை , முகுவலி போன்ற காரணங்களால் தட்டச்சு செய்யவும் ,மின்னஞ்சல் அனுப்பவும் இயவில்லை . வயது எண்பதைத் தாண்டியது!

      Delete

  5. புலவா் ஐயா அவா்களுக்கு
    வணக்கம்

    இவ்வகைப் பாட்டின் இலக்கணத்தை
    விருத்தப்பாவியல்

    சீா்விள மாச்சீா் தேமாச்
    சீரிணைந் திரட்டு மீங்கே!

    என உரைக்கும்!

    விருத்தத்தின் ஒவ்வொரு அரை அடியிலும்
    இறுதியில் தேமாச் சீா் வரவேண்டும்

    பாரதியின்

    இதம்தரும் மனையும் நீங்கி
    என்ற விருத்தத்தைக் காணவும்!

    ஐயா!
    தங்களின் மின்னஞ்சலைத் தெரிவிக்கவும்
    அல்லது இல்லத்தின் தொலைபேசி எண்களைத் தெரிவிக்கவும்

    இதுபோன்ற கருத்துகளை இவ்வழிகளில் கலந்துரையாடலாம்

    என் மின்னஞ்சல் ஃ kambane2007@yahoo.fr
    தொலைபேசிஃ 003 1 39 93 17 06

    ReplyDelete
    Replies


    1. என் மின்னஞ்சல் ஃ jram178@yahoo.co.in
      தொலைபேசிஃ 044-24801690

      Delete
  6. கவிதை அருமை ஐயா...
    காலம் கனியும் ஐயா...

    ReplyDelete
  7. ஐயா வணங்குகிறேன்!
    அருமையான கவிதை படைத்தீர்கள். இளையோருக்கு உரமூட்டூம் வரிகள்!

    //தற்கொலை வேண்டா மிங்கே
    தன்னலம் மிக்கோ ரிங்கே

    ஏழைகள் வடித்த கண்ணீர்
    எரிந்திடும் தீயாய் ஆமே//

    என்னைக்கவர்ந்த வரிகள் ஐயா.
    உண்மை. எரித்திடும். எரிந்திவான் எதிரி...

    வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
  8. விரைவில் நடக்கக் காத்திருப்போம்!அருமை ஐயா

    ReplyDelete

  9. வணக்கம்!

    தங்கள் மடல் கண்டேன்!
    மகிழ்ச்சியுற்றேன்!

    எண்பதைத் தாண்டி இயங்கும் அரும்புலவா்
    உண்பதை இங்கே உரைக்கின்றேன்! - நண்பா்காள்!
    வண்ணத் தமிழமுதை வாரிப் பருகுகிறார்!
    எண்ணம் இனிக்க இசைத்து!

    எங்கள் புலவா் இராமா நுசரே!நல்
    திங்கள் ஒளியாய்த் திகழ்கின்றீா்! - இங்கெமக்குப்
    பன்னுமோர் பாட்டெல்லாம் பைந்தமிழ்ச் சீா்மணக்க
    இன்னுமோர் நுாற்றாண்[டு] இரு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete