Saturday, March 16, 2013

ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே ஒலிக்கும் ஒலியும் கேட்கலையா




மீண்டும் இங்கே பாடுகின்றேன்-கருணை
     மத்தியில்  எங்கே? தேடுகின்றேன்
வேண்டும் மௌனம் கலைந்திடவே-உடன்
     விரைவில் முடிவு எடுத்திடவே
மாண்டவர் எம்மவர் நடந்தகதை-அதை
     மாற்றிட செய்வீர் இன்றேயிதை
சீண்டிட வேண்டாம் மேன்மேலும்-தீய
     சிங்களர் வாழந்திட வருநாளும்!

அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
     அழுது அலற பார்த்தவரும்
பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று 
     பார்த்தன உலகமே கொலைவெறியை
துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
     துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
     மேன்மை கொண்டே மலரட்டும்

இமயம் வரையில் வென்றானே-இன்று
     இதயம் வெடிக்க நின்றானே
சமயம் இதுதான் ஆள்வோரே-பெற்ற
     சாபம் நீங்கிடும் மீள்வீரே!
அமையும் ஈழத்தில் நல்வாழ்வே-சிங்கள
     அரசுக்கு எதிராய் ஓட்டளிப்பின்
உமையும் வாழ்த்திப் புகழ்வாரே-எனில்
    உலகில் தாழ்த்தி இகழ்வாரே

கன்றின் வாழ்வும் பட்டதென-தேர்
    காலில் மகனை இட்டவனை
இன்றும் போற்றும் எம்மினமே-என
    எண்ணிப் பாரீர் இத்தினமே
நன்றே செய்வீர் நம்புகிறோம்-ஆனால்
    நடந்ததை நினைப்பின் விம்முகிறோம்
ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே
   ஒலிக்கும் ஒலியும் கேட்கலையா ?

              புலவர்  சா  இராமாநுசம்




8 comments:

  1. // நன்றே செய்வீர் நம்புகிறோம்//
    நம்பிக்கைத்தானே வாழ்க்கை. நல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா.

    ReplyDelete
  2. நம்பிக்கை கொண்டு தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது புலவர் ஐயா....

    ReplyDelete
  3. செவிடாய் இருந்தாலும் கேட்க வைத்திடலாம். செவிடாய் நடிப்பவரிடம் எப்படி ஏற்க வைப்பது?
    நல்ல கவிதை ஐயா!

    ReplyDelete
  4. டெம்ப்ளேட் மாற்றம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  5. விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் மத்திய அரசு! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete

  6. வணக்கம்!

    இணைந்து தமிழா் செயல்பட்டால்
    இன்னல் யாவும் பறந்தோடும்!
    பணிந்து பயந்து வாழுவதோ?
    பகைவா் காலில் வீழுவதோ?
    துணிந்து நின்றால் துயா்ஏது?
    தோழா எழுக! தமிழ்வாழ்க!
    புனைந்து வைத்தார் நம்புலவா்!
    பொங்கும் புலமை வாழியவே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. விரைவில் நல்லது நடந்தால் சரி...

    ReplyDelete
  8. அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
    அழுது அலற பார்த்தவரும்
    பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று
    பார்த்தன உலகமே கொலைவெறியை
    துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
    துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
    மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
    மேன்மை கொண்டே மலரட்டும்

    அனலாய்க் கொதிக்கிறது உள்ளம்
    இத்தனை துயர்களையும் பார்த்த பின்னாலும்
    எத்தனை தவறுகள் தொடருது ஐயா :(

    ReplyDelete