Monday, March 11, 2013

நினைவேநான் உனக்கென்ன தீங்கா செய்தேன்-சுடும் நெருப்பாகி நாள்தோறும் வாட்டு கின்றாய்

            புலவர் கல்லூரியில்  படித்த போது
                                    எழுதியது


      தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை  வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்
      
      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா  மின்விளக்காய்  விண்ணில்  தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்
      
      அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்
           
              புலவர் சா இராமாநுசம்

8 comments:

  1. பொருள் வழிப் பிரிவினால் தலைவன் சென்றுவிட தலைவியின் ஏக்கம் அழகுத் தமிழில் பொங்கில் பிரவகித்திருக்கிறது. கவிதைச் சாரலில் ஆனந்தமாய் நனைந்தேன் நான். நன்றி ஐயா!

    ReplyDelete
  2. அருமையான பாடல் ஐயா ...

    ""பிரிவின் துயரை
    துச்சமென மதிக்கும்
    துச்சாதன வம்சம்""

    என்னைப்போன்றோர் தினம் தினம் அனுபவிக்கும்
    செய்தி ஐயா..

    அழகாக எழுதி இருக்கிறீர்கள் பெருந்தகையே...

    ReplyDelete
  3. அருமையான கவிதை. உங்கள் பெட்டகத்தில் உள்ள மற்ற பழைய கவிதைகளையும் பதிவேற்றுங்களேன்.

    ReplyDelete
  4. தலைவனைப் பிரிந்த தலைவியின் தாபம் சொல்லும் அருமையான சங்கத் தமிழ்க் கவிதை!

    ReplyDelete
  5. அந்தநாள் ஞாபகம் உண்மையாய் தான் இருக்கும்

    ReplyDelete
  6. அருமையான பா.... ரசித்தேன்.

    ReplyDelete
  7. காலப் பெட்டகம் காத்து வைத்திருந்த அருமையான கவிதை...

    ரசிக்க வைத்தது ஐயா...

    ReplyDelete