Friday, February 8, 2013

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும் !



ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

4 comments:

  1. //கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
    காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை//
    கவிஞர்களின் வாக்கு பொய்க்காது என்பார்கள். நினைத்தது நடக்கும் ஒரு நாள்.

    ReplyDelete
  2. நினைத்தது விரைவில் நடக்கட்டும்...

    ReplyDelete
  3. வேதனை தான் அய்யா ...

    ReplyDelete
  4. கொழுந்து விட்டு எரியும் குமுறல்!

    ReplyDelete