Saturday, February 23, 2013

பதினாறு பேர்கள் மாண்டு போக –பலர் படுகாயம் அடைந்துமே நொந்தோ ராக!




பதினாறு  பேர்கள்  மாண்டு போக பலர்
      படுகாயம் அடைந்துமே  நொந்தோ ராக!
சதிகாரர்  குண்டுதனை  வைத்து  விட்டார் நம்
     சமுதாய  ஒற்றுமைக்கு   அழிவும் இட்டார்!
விதியென்றே  சொல்வதா  இதனை  இங்கே அட
    வீணர்களின்  செயலுக்கு  பலன்தான்  எங்கே?
மதிமாறி  போகின்றீர் ! வேண்டாம்  இனியும் எதிர்
     மாறான  நிகழ்வுகளே  மேலும் விளையும்!

அப்பாவி  மக்கள்தான்  அழிந்து  போனார் ஏதும்
     அறியாது  நொடியிலே  பிணமாய்  ஆனார்!
எப்பாவி  செய்தானே  இந்த கொடுமை உலகம்
     ஏற்காது  என்றுமே! அறியார்  மடமை!
ஒப்பாது! ஒப்பாது  நல்லோர்  உள்ளம் நன்கு
     உணர்ந்தாலே  வாராது  நெஞ்சில்  கள்ளம்!
முப்போது  சொன்னாலும் உண்மை  என்றும் இன
    மூர்கரே! நினைத்திடின்  விளைவே  நன்றும்!


மதவெறி  இனவெறி  ஒழியும்  நாளே !மக்கள்
      மனிதத்தை  நேயத்தை  மதிக்கும் நாளே!
சதமென  சமுதாயம்  போற்றும்  நாளாம் மேலும்
     சாதிமத  வேற்றுமையை  அறுக்கும்  வாளாம் !
பதவிவெறி பணத்தாசை  இலஞ்ச ஊழல்- நாளும்
      பரவாமல்  தடுக்கின்ற  தூய  சூழல்!
உதவிடுமே ! அமைதியுடன்  நாமும்  வாழ ஆள்வோர்
      உணர்ந்தாலே  போதுமே  வளமை சூழ!

                                புலவர்  சா  இராமாநுசம்

7 comments:

  1. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

    ReplyDelete
  2. நாளுக்கு நாள் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து அமைதியைக் குலைக்கின்றன.

    ReplyDelete

  3. புலவா் அவா்களுக்கு வணக்கம்

    சந்தம் ஒலித்திடச் சாற்றிய பாட்டினில்
    சிந்தை மயங்கும் செழித்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  4. முடிவில்லாமல் தொடரும் இந்த அவலங்கள் நீங்க அமைதியாய் வாழும் நாள் எந்நாளோ

    ReplyDelete
  5. வேதனை தந்த சேதி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. இதுபோல் அவலம் வேண்டாம்.

    ReplyDelete
  7. வருந்தணும் திருந்தனும் மக்களாய் மதிக்கணும்

    ReplyDelete