Tuesday, February 19, 2013

வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து வருந்தி எழுதினேன் நானிதனை




வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைசுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றி கண்துஞ்சல்
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

              புலவர்  சா இராமாநுசம்

9 comments :

  1. என்ன ஐயா சொல்ல? நேற்று இரவில் இருந்து தூக்கமே இல்லை! உங்களின் எத்தனையோ கவிதைகள் எமக்கு ஆறுதல் தந்திருக்கு ஐயா - இந்தக் கவிதையும் அப்படியே!

    நீங்கள் எல்லோரும் இருப்பதால், நம்பிக்கையோடு இருக்கிறோம்!

    ReplyDelete
  2. தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்.எம் வேதனைகளை கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.உங்கள் கவிதை நடை பிரமிக்கவைக்கின்றது.

    ReplyDelete
  3. வேதனையான விசயம்! அந்த பிஞ்சு முகத்தை பார்க்கையில் கண்ணீர் தானாக வருகிறது! இப்படியும் கொடுமை செய்த இலங்கை ராணுவத்தை என் செய்வது! இந்தியா குரல் கொடுக்க வேண்டும்!

    ReplyDelete
  4. ஒவ்வொரு வரியும் வலியைச் சுமந்து நிற்கிறது!

    ReplyDelete
  5. வேதனைகள்..வலிகள்.. நிச்சயம் மாற்றம் பிறக்கும்..

    ReplyDelete
  6. விலங்கு கூட செய்யாத செயல்

    ReplyDelete
  7. சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
    செழிக்க வாங்கித் தருவாயா//வேண்டுமையா தமிழனுக்கு நிம்மதி

    ReplyDelete
  8. மீண்டும் மீண்டும் கிளறப்படும் ரணங்கள்..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...