Sunday, February 17, 2013

பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!



ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்

14 comments :

  1. இதற்கு தான் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்பதோ...?

    ReplyDelete
  2. கண்டிக்க மட்டுமே நம்மால் முடியும் ஐயா..

    ReplyDelete
  3. இன்றைய நடப்பை அடுக்கடுக்காய் சொல்கிறது கவிதை.

    ReplyDelete
  4. ஐயா, இனி மாதாமாதம் அமாவாசை வருகிறதோ இல்லையோ, பெட்ரோல் விலையேற்றம் அவசியம் வருமாம்! :-(

    ReplyDelete
  5. பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
    போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!//
    பணத்தைப் பார்க்காமல் நடத்தை பார்த்து வாக்களிக்க வேண்டும்

    ReplyDelete
  6. உண்மைதான் ஐயா! சிந்தித்து வாக்களிக்க நாம் தயாராக இருந்தாலும் தெளிவுள்ள அரசியல் வாதிகள் இல்லையே!

    ReplyDelete
  7. எப்படிச் சிந்தித்து வாக்கிட்டாலும், பதவிக்கு வந்த பின்னர், மாறிவிடுகிறார்களே ஐயா!

    ReplyDelete
  8. நல்ல கவிதை நல்ல கருத்து எடுப்பாரோ மக்கள் என்றுதான் மாற்றுவார் இந்நிலைமை

    ReplyDelete
  9. தீராத அவலங்களைத் தினமும் கவிதையாகத் தீட்டி வரும் தங்களின்
    உள்ளத் துயரதை ஒட்டுமொத்த வரிகளிலும் உணர முடிகின்றது ஐயா
    ஆனால் உணர வேண்டியவர்கள் உணரும் நிலை என்றுதான் வரும் !

    ReplyDelete
  10. பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
    போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!//
    நாம் மட்டுமல்ல எல்லோருமே இப்படி சிந்திக்க வைக்க வேண்டும் அய்யா

    ReplyDelete
  11. இன்றைய நடப்புகளே கவிதையாய்

    ReplyDelete
  12. இந்த நாட்டில் சிந்தித்து வாக்களிப்பவர் எத்தனை விழுக்காடு?மாறும் என நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  13. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (19.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
  14. தேர்தலில் நிற்கும் அனைத்துக் கெட்டவர்களில்
    ஒரு “நல்ல“ கெட்டவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள்....

    அதிலும் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்!

    இதனால் தெரியாத பேயைவிட
    தெரிந்து பிசாசே பொதும் என்று
    வாக்களித்து விடுகிறோம்.

    என்ன செய்வது...?

    கவிதை அருமை புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...