Wednesday, February 13, 2013

காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!




கண்ணே  இழந்து  போனாலும்  -வாழக்
     கருதியே  உறுதியாய்  இருந்தவளே!
பெண்ணே  இறந்து  போனாயே  -காமப்
     பேயனால்  இந்நிலை  ஆனாயே!

காதல்  கிறுக்கர்கள்  பெருகிவிட்டார்-இளம்
    கன்னியர்  பலரும்   கருகிவிட்டார்!
வேதனை  நடப்பதே   நாடெங்கும் கண்ணீர்
   விடுவதா  பெற்றோர்  வீடெங்கும்!

பெற்றே  வளர்த்து  சீராட்டி கொஞ்சிப்
    பேசியே  நாளும்  பாராட்டி !
 கற்றே  உயர்ந்திடச்   செய்தாரே இன்று
     கண்ணீர்  மழையெனப்  பெய்தாரே!

அந்தோ இனியவர்   என்செய்வார் மன
   ஆறுதல்  எவ்வண்  அவரெய்வார்
வெந்தே  சாவது  தலைவிதியா! மேலும்
   விளம்பிட  வேறு    மதியிலையா!?

இருவர்  மாட்டு  ஏற்படுமே காதல்
   என்றால்  உண்மை  பொருள்படுமே
ஒருவர்  மாட்டு   தோன்றுவது என்றும்
    ஒருதலைக்  காதல்  எனப்படுமே!

வேண்டாம்  இந்த  விளையாட்டும் அதன்
   விளைவை  எடுத்தே  இதுகாட்டும்!
ஈண்டே   இதுவே  முடிவாக பாடம்
     இளையோர்   கற்றிட  விடிவாக!


               புலவர்  சா  இராமாநுசம்
   

10 comments :

  1. நடந்த கொடுமை-நடக்கவே கூடாது...

    ReplyDelete
  2. திரைப்படத்தின் தாக்கம் அமெரிக்காவில் சுட்டுத் தள்ளுவதில் முடிகிறது, இங்கோ பெண்களின் மீது வன்முறையாக விடிகிறது

    ReplyDelete
  3. அந்தோ இனியவர் என்செய்வார் –மன
    ஆறுதல் எவ்வண் அவரெய்வார்
    வெந்தே சாவது தலைவிதியா! –மேலும்
    விளம்பிட வேறு மதியிலையா!?//
    சரியாக கேட்டீர்கள் அய்யா.

    ReplyDelete
  4. இக்கொடிய சம்பவத்திலிருந்து அப்பெண்ணின் பெற்றோர் மீளவும், வினோதினியின் ஆன்மா அமைதியுறவும் இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  5. காதல் கிறுக்கர்கள். சரியான வார்த்தை. இந்தக் கொடுமைக் கிறுக்கர்களால் எவ்வளவு பேருடைய வாழ்க்கை பாழாகிறது.

    ReplyDelete
  6. கொடுமை.... கவிதை படிக்கும் போதே மனசு கனக்கிறது....

    ReplyDelete
  7. நாட்டு நடப்பைப்பார்க்கும்போது வயிற்றில் பந்து சுருளுதையா!

    ReplyDelete
  8. இதையெல்லாம் பார்த்தாவது
    ஒருதலைகள் திருந்த வேண்டும்.

    படைப்பில் வலி தெரிகிறது புலவர் ஐயா.

    த.ம. 7

    ReplyDelete
  9. வேண்டாம் இந்த விளையாட்டும் –அதன்
    விளைவை எடுத்தே இதுகாட்டும்!
    ஈண்டே இதுவே முடிவாக – பாடம்
    இளையோர் கற்றிட விடிவாக!//

    வழி தவறி நடக்கும் இளைய சமுதாயத்தினருக்கு நல்ல வழி காட்டும் கவிதை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...