Monday, February 11, 2013

போறா தம்மா போறாதே -உழவன் போட்ட முதலே ஆகாதே!




போறா  தம்மா போறாதே  -உழவன்
       போட்ட  முதலே  ஆகாதே!
ஆறாப்  புண்ணாம்  அவன்மனமே உடன்
      ஆற்ற வேண்டும்   இத்தினமே!
மாறா  தம்மா  அவன்வறுமை தொகை
      மாற்றி உயர்ந்திடின்  வரும்பெருமை!
சோறே பொங்குமா  அவன்வீட்டில் அதை
       சொல்வீர்   அம்மா  நாளேட்டில்!

உழைக்கும்  கூலியாம்  விவசாயி அவன்
      உழைத்த  நிலத்தில்  பயிர்சாவி!
பிழைத்திட  ஏதும்  வழியில்லை  -பசிப்
       பிணியில்  வருந்திடு மப்பாவி!
தழைத்திட   வழியும்  செய்வீரே துயர்
      தவிர்த்திட  அன்பைப்  பெய்வீரே!
அழைத்திட  காலன்  வருமுன்னே ஆளும்
      அம்மா  அருள்வீர்  நனியின்னே!

எண்ணிப்  பார்த்தால்  இழப்பீடு யாரும்
       எண்ணிட  இயலா   பெருங்கேடு!
கண்ணில்  வழிந்த   கண்ணீரே  -உழவன்
      கழனியில்  விழுந்த தண்ணீரே!
மண்ணில்  உழுதொழில்  முடங்கிவிட உயிர்
      மண்ணொடு  மண்ணாய்  அடங்கிவிட
புண்ணில்  வேலைப்  பாச்சாதீர் பால்
      பொங்கிய  பின்னும்  காச்சாதீர்!
மண்ணில்  உழுதொழில்  முடங்கிவிடும் உயிர்
      மண்ணொடு  மண்ணாய்  அடங்கிவிடும்

உலகின்  அச்சாம்   ஆணியவன் வாழ
        உதவும்  உயிருக்கே  ஏணியவன்
அலகில்  துயரால்  அல்லல்பட  - இந்த
        அவனியில் பஞ்சம்   மிஞ்சிவிட
கலகமே  எங்குமே  தோன்றிவிடும்-இக்
       கருத்தை  மனதில்  ஊன்றிவிடும்
இலவுக்  காத்த  கிளியல்ல அமைதியாய்
      இனியும்  இருத்தல்  சரியல்ல!

                    புலவர்  சா  இராமாநுசம்


6 comments :

  1. unmai...


    valiyaana varikal ayy....

    ReplyDelete
  2. வியாபாரிகளுக்கு கவலைப்படும், நாம் விவசாயிகளைப்பற்றி கவலைப்பட்டது இல்லை. அவர்கள் இல்லையேல் நாம் இல்லை. மைய மற்றும் மாநில அரசுகள் இப்போதாவது நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும். ஆற்றாமையால் எழுதிய தங்கள் கவிதை அருமை.

    ReplyDelete
  3. வேதனை ... அவர்களின் நிலை வர வர மேலும் மோசமாகி செல்கிறது அய்யா

    ReplyDelete
  4. கவிதை மனத்தைக் கனக்கச்
    செய்கிறது புலவர் ஐயா.

    ReplyDelete
  5. கண்ணில் வழிந்த கண்ணீரே -உழவன்
    கழனியில் விழுந்த தண்ணீரே!///
    உண்மைதான் ஐயா விவசாயியின் நிலை பரிதாபத்திற்குரியது

    ReplyDelete
  6. உழுவார் உலகத்தார்க்கு ஆணியல்லவா!அருமை

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...