Wednesday, January 9, 2013

வேண்டியதும், வேண்டாததும்




முடிந்தவரைப்  பிறருக்கு  உதவ  வேண்டும் அவை
     முடியவில்லை  என்றாலும்  தளர  வேண்டாம்
விடிவுவரும் வரைநமக்கு  பொறுமை  வேண்டும் இரவு
     விடியாமல்  போவதுண்டா  கலங்க வேண்டாம்
கடிதுவரும்  என்றெண்ணி  இருத்தல்  வேண்டும் சற்று
      காலமது  ஆனாலும்  கவலை    வேண்டாம்
கொடிதுயெனில்  எதையுமே  தவிர்த்தல்   வேண்டும் சிறு
     குற்றமெனில்  அதைப்பெரிதுப்  படுத்தல்  வேண்டாம்

எண்ணியெண்ணி  எச்செயலும்   செய்தல்  வேண்டும் நாம்
     எண்ணியபின்  தொடங்கியதை  விடுதல்   வேண்டாம்
கண்ணியமாய்  என்றுமே  வாழ்தல்  வேண்டும் வரும்
      களங்கமெனில்  அப்பணியைச்  செய்தல் வேண்டாம்
புண்ணியவான்  என்றும்மைப்  போற்ற  வேண்டும் பிறர்
     புண்படவே  சொல்லெதுவும்  புகல  வேண்டாம்
மண்ணுலகில்  அனைவரையும்  மதித்தல்  வேண்டும் குணம்
    மாறுபட்டார்  தம்முடைய  தொடர்பே   வேண்டாம்

சட்டத்தை  மதித்தேதான்  நடத்தல்  வேண்டும் பெரும்
      சந்தர்ப  வாதியாக  நடத்தல்  வேண்டாம்
திட்டமிட்டே  செலவுதனை  செய்தல்  வேண்டும் ஏதும்
     தேவையின்றி  பொருள்தன்னை  வாங்கல்  வேண்டாம்
இட்டமுடன்  ஏற்றபணி  ஆற்ற  வேண்டும் மனம்
     இல்லையெனில்  மேலுமதைத்   தொடர  வேண்டாம்
கட்டம்வரும்  வாழ்கையிலே  தாங்க  வேண்டும் உரிய
       கடமைகளை   ஆற்றுதற்கு   தயங்க  வேண்டாம்

முன்னோரின்   மூதுரையை  ஏற்க  வேண்டும் வாழும்
     முறைதவறி  வாழ்வோரின்  தொடர்பே  வேண்டாம்
பின்னோரும்  வாழும்வழி  செய்தல்  வேண்டும் பழியைப்
      பிறர்மீது  திணிக்கின்ற  மனமே  வேண்டாம்
இன்னாரும்  இனியாராய்க் கருதல்  வேண்டும் பெருள்
     இல்லாரை  எளியராய்  எள்ளல்  வேண்டாம்
தன்னார்வத்  தொண்டரெனும்  பணிவு  வேண்டும் எதிலும்
      தன்னலமே  பெரிதென்று  எண்ணல்  வேண்டாம்

                                புலவர் சா  இராமாநுசம்

இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கியுள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கொள்ள விரும்புவோர் தொடரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்    

14 comments :

  1. வேண்டியது எது வேண்டாதது எது எனத் தெளிவாக கூறிவிட்டீர்கள். நல்ல கவிதையைத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க! தங்கள் வருகைக்கு

      Delete
  2. தன்னம்பிக்கையைத் தூண்டும் வரிகள் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க! தங்கள் வருகைக்கு

      Delete
  3. இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கியுள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கெள்ள விரும்புவோர் தொடராலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அனைத்தும் நல் வாழ்வுக்குகந்த முத்தான வரிகள்!...மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க! தங்கள் வருகைக்கு

      Delete
  5. வேண்டுதல் வேண்டும் வேண்டாதவை வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க! தங்கள் வருகைக்கு

      Delete
  6. அருமையான சிந்தனைகளை வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள் அய்யா

    ReplyDelete
  7. எத்தனை வேண்டுதல் இருக்க வேண்டாதவைதானே முதலில் வேண்டப்படுகிறது !

    ReplyDelete
  8. விடிவுவரும் வரைநமக்கு பொறுமை வேண்டும் –இரவு
    விடியாமல் போவதுண்டா கலங்க வேண்டாம்//
    வேண்டும் நிறைவான நிம்மதி வேண்டும்

    ReplyDelete
  9. பாடல் மிக மிக அருமை புலவர் ஐயா.

    (எப்படித்தான் யோசிக்கிறீர்களோ...!!!)
    விரும்பி படித்தேன்.
    த.ம. 7

    ReplyDelete
  10. உங்கள் உள்ள நிலையை அப்படியே
    விளக்கிப் போகும் கவிதை அருமையிலும் அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...