Saturday, January 5, 2013

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!




பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
அழுதுகிட்டே  மீன்பிடிக்கும்  மீனவன்  போல -அவன்
   அல்லலுக்கு  விடிவுண்டா  என்றும்  சால!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!

பொழுதுமுட்ட  குடிக்கின்றான்   கவலை  அகல இல்லம்
   போனபின்னர்  அவன்செயலை  எடுத்துப்   புகல!
விழுதுகளாம்  பிள்ளைகளும்  மனைவி  என்றே படும்
    வேதனையை  விளக்குவதும்  எளிதும்  அன்றே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


                                             
நஞ்சுண்ட  விவசாயி  கண்டோம்  இன்றே வரும்
    நாட்களிலே  நடக்குமிது  காணும் ஒன்றே!
பஞ்சுண்டு  நெய்வதற்கும்  ஆலை யுண்டே ஆனா
    பலநாளாய்  மூடியது   அரசின்  தொண்டே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


கஞ்சுண்டு  வாழ்வதற்கும்  தொட்டி  கட்ட அரசு
     கருணையுடன்  மானியமே  நம்முன்  நீட்ட!
நெஞ்சுண்டு  நன்றிமிக  வாழ்வோம்  நாமே பெரும்
      நிம்மதியாய்  அஞ்சலின்றி  நாளும்  தாமே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
                       
                          புலவர்  சா  இராமாநுசம்

13 comments:

  1. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்,இன்வேர்ட்டர் இருந்தும் என்ன பயன் ,ஏழை விவசாயிக்கு தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் கண்ணீரும் வற்றிவிட்டது

    ReplyDelete
  2. போலி சாமியார் செய்தி முதல் கற்பழிப்புச் செய்தி ஈறாக எல்லாமே சில தினங்கள் பரபரப்புக்குப் பின் மறக்கப்பட்டு விடுவது நமக்கான சோகம். போர்க்குணம் வளர வேண்டும். இல்லையேல் எதுவும் சரிவராது என்றே தோன்றுகிறது. அருமையான கருத்தை அழகான கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. நன்று.

    ReplyDelete
  3. //பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும்//
    உண்மைதான் ஐயா.அருமை.

    ReplyDelete
  4. நடக்கும் நிகழ்வுகள் ஒரு வித சலிப்பை ஏற்படுத்தினாலும் பழகுவது என்பது கடினமான விஷயம் தான். எங்கெங்கோ நடக்கும் நிகழ்வகள் நம் உறவுகளுக்குள் நடந்ததாய் நினைத்து வருந்தும் என் போன்ற வர்க்கத்திற்கு கடினம் தான்.

    ReplyDelete
  5. பழக பழக எல்லாம் பழகி போகிறது! உண்மைதான்! நல்லதொரு படைப்பு! நன்றிஐயா!

    ReplyDelete
  6. உங்கள் கவிதைக்கு இந்தப் படத்தை காணிக்கை ஆக்குகிறேன் அய்யா...

    http://www.facebook.com/photo.php?fbid=460491907333811&set=a.412452212137781.88960.100001190185740&type=1&theater&notif_t=like

    ReplyDelete
  7. ஆம் அய்யா, எல்லாமே பழகிப் போய்விட்டது. நன்றி

    ReplyDelete
  8. உண்மைதான் பழக்கம்தான் எல்லாம்.முந்தைய காலத்திலும் இவைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள்தானே !

    ReplyDelete
  9. பழக பழக பாலும் குளிக்குமே ஐயா

    விரத்தைதான் வருகிறது.

    த.ம. 6

    ReplyDelete