Wednesday, January 23, 2013

மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை மறப்பின் இல்லை புனிதர்களே!




       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
      
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
       
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
      
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
          

11 comments:

  1. ஒவ்வொரு நாளின் விடியலின் போதும்
    இந்தக் கவிதையை ஒருமுறைப் படித்தால்
    நல்ல மனிதனாக வாழ் நிச்சயம் முயல்வோம்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைவரும் அவசியம படித்து மனதில் பதிக்க வேண்டிய வீரியமான (க)விதை! கடைசி நாலு வரிகள் பளிச்சென்று மனதில் தைக்கின்றன. அருமை ஐயா.

    ReplyDelete
  3. யப்பப்பா! ஒவ்வொரும் வரியும் செம, அருமையான வரிகள் ஐயா. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
    அக்கினி தனக்கே எருவானோம்
    பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
    பொருளை எடுத்துப் போனோமா
    கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
    கையும் காலும் ஆடவில்லை
    மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!

    என்னவென்று சொல்வேன் !
    புலமையொடு பண்பும் புகுந்து நின்றாடும்
    வெறுங் கவிதை அல்ல இவைகள் நாம்
    கற்றுணர வேண்டிய பொக்கிசங்கள் என்றே
    மனம் வியந்து நின்றேன் !!!!...............
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
    தினமும் சேர்த்தது பலகோடி
    சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
    சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
    நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
    நாளும் உண்ணும் உணவறியா
    பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
    பணம்பெரின் இல்லை சுகவாழ்வே // அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றிஐயா!

    ReplyDelete
  6. ஆஹா... அருமையான கவிதை புலவர் ஐயா.
    வணங்குகிறேன்!
    த.ம. 5

    ReplyDelete
  7. மிகவும் ரசித்தேன்...அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
  8. மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!// உண்மை ஐய்யா

    ReplyDelete
  9. பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு போல ஒரு தத்துவக் கவிதை!

    ReplyDelete
  10. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் எத்தனை ஆட்டம்?
    நன்று

    ReplyDelete